செவ்வாய், 16 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Modified: புதன், 18 நவம்பர் 2015 (13:20 IST)

நீர்நிலைப் பகுதியை ஒட்டியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்: ஜி.கே.வாசன்

அனைத்து மாவட்டப் பகுதிகளிலும், நீர்நிலைப் பகுதியை ஒட்டியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிட வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.


 

 
 இது குறித்து ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
 
தமிழகத்தில் பாயும் ஆறுகள், ஓடும் நதிகள், வாய்க்கால்கள், குளம், குட்டைகள், ஏரிகள் போன்ற நீர் நிலைகளில் இருக்கும் தண்ணீர் வீணாகாமலும், கடலில் கலக்காமலும் சேமித்து வைக்க வேண்டும்.
 
குறிப்பாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தாமிரபரணி நதியின் கடைசி அணைக்கட்டான ஸ்ரீவைகுண்டம் அணையின் இரு கரைகளிலும் பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் முற்புதர்கள் அடர்ந்திருப்பதால் சுமார் 25 சதவீதம் தண்ணீர் மட்டுமே செல்ல வாய்ப்பிருக்கிறது.
 
இதனால் பல லட்சம் கனஅடி நீர் உபரி நீராக கடலில் சென்று கலந்து பயனற்றதாகி விடுகிறது. தற்போது பெய்து வரும் கனமழையால் காவிரி, வைகை, குண்டாறு நதிநீர், மலைகளிலிருந்து வெளியேறும் நீர் உட்பட தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு நீர் நிலைகளில் இருந்தும் வெளியேறும் உபரி நீர் கடலில் கலந்து வீணாகிறது.
 
அனைத்து மாவட்டப் பகுதிகளிலும் உள்ள அனைத்து நீர்நிலைப் பகுதியை ஒட்டியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிட வேண்டும்.
 
குறிப்பாக ஆறு, ஏரி, குளம், குட்டைகள் போன்றவற்றை தூர்வாரி, ஆழப்படுத்தி, அகலப்படுத்தி, கரைகளை உயர்த்தி நீர் ஆதாரத்தை சேமித்து வைக்க வேண்டும்.
 
நதிகளை இணைத்திட வேண்டும், நீர் தேக்கங்களை அதிகமாக்கிட வேண்டும், தேவையான இடங்களில் தடுப்பணைகளை அமைத்திட வேண்டும்.
 
மேலும் மழை நீரை சேமித்திடும் வகையில் கிராமம் முதல் நகரம் வரை உள்ள வீடுகள், பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் போன்ற அனைத்து கட்டிடங்களிலும் மழை நீர் சேகரிப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 
தமிழக மக்கள் வாழ்நாள் முழுவதும் தங்களின் முக்கிய அத்தியாவசியத் தேவையான தண்ணீரை விவசாயத்திற்கும், குடிநீருக்கும் தங்கு தடையின்றி பயன்படுத்திட தமிழக அரசு பல்வேறு செயல்திட்டங்களை வகுத்து விரைந்து நடைமுறைப்படுத்திட வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.