1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Updated : வியாழன், 19 நவம்பர் 2015 (09:23 IST)

வீடுகளை விட்டு வெளியேற்றப் பட்டவர்களின் உடைமைகளுக்கு காவல்துறை பாதுகாப்பு: ஜெயலலிதா

மழையால் பாதிக்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப் பட்டுள்ளவர்களின் வீடுகள் மற்றும் உடைமைகளுக்கு காவல்துறை மூலம் பாதுகாப்பு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.


 

 
இது குறித்து ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
 
பெருமழை காரணமாகவும், ஏரிகள் நிரம்பி மழைநீர் உட்புகுந்ததன் காரணமாகவும், பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு அமைச்சர்கள், அரசு உயரதிகாரிகள் ஆகியோர் அடங்கிய குழுவினை அனுப்பி நிவாரணப் பணிகளை விரைந்து செயல்படுத்த நான் பணித்திருந்தேன்.
 
அதனடிப்படையில், துரிதமான மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் குழுவால் மேற்கொள்ளப்பட்டன. கடலூர் மாவட்டத்தைப் பொறுத்தவரை 683 கிராம ஊராட்சிகளிலும் மின் விநியோகம் முழுவதும் சரிசெய்யப்பட்டு தடையற்ற மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.
 
அனைத்து தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகள் சீரமைக்கப்பட்டு சாலைப் போக்குவரத்து சீரான முறையில் நடைபெற்று வருகிறது. 70 நிவாரண முகாம்கள் செயல்பட்டு வருகின்றன. மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 2,34,750 உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளன.
 
பெருமழை மற்றும் வெள்ளப் பெருக்கால் பாதிக்கப்பட்ட காஞ்சிபுரம் மாவட்டத்தில் இந்திய ராணுவத்தைச் சேர்ந்த 180 வீரர்கள் உள்ளிட்ட 673 பேர் மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர். காவல் துறை, வருவாய்த் துறை மற்றும் இதர அரசுத் துறைகளைச் சார்ந்த 1,673 அலுவலர்கள் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர்.
 
வெள்ளத்தில் சிக்கியிருந்த 16,613 பேர் மீட்கப்பட்டனர். இதற்கென 133 படகுகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. 116 சிறப்பு முகாம்கள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் 34,426 பேர் தங்க வைக்கப்பட்டு உணவு, குடிநீர் மற்றும் மருத்துவ வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.
 
வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் வீடுகளிலேயே தங்கியுள்ள நபர்களுக்கு 1,01,000 உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளன. 1,50,000 அம்மா குடிநீர் பாட்டில்களும் விநியோகிக்கப்பட்டன. 37 ஆம்புலன்ஸ் வாகனங்களும், 48 மருத்துவர்களும், மருத்துவ சிகிச்சைப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு 11,756 நபர்களுக்கு மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
 
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தாம்பரம், முடிச்சூர் ஆகிய பகுதிகளில் இருந்து பாதுகாப்பான இடங்களுக்கு மக்கள் கொண்டு செல்லப்பட்டுள்ளதால் அவர்களது வீடுகள் மற்றும் உடைமைகளுக்கு காவல் துறை மூலம் பாதுகாப்பு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 
 
கன மழையால் பாதிக்கப்பட்ட திருவள்ளூர் மாவட்டத்தில் நிவாரணம் மற்றும் சீரமைப்புப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. கனமழையால் பூண்டி நீர்த் தேக்கத்திற்கு அதிகளவு நீர்வரத்து ஏற்பட்டதை தொடர்ந்து, இந்நீர்த் தேக்கத்திலிருந்து 25,000 கனஅடி உபரி நீர் கொசஸ்தலை ஆற்றில் திறந்து விடப்பட்டது.
 
இதன் காரணமாக மணலி புதுநகர், எழில் நகர், விச்சூர், சடையன் குப்பம் ஆகிய பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது. ஏரிகளில் ஏற்பட்ட உடைப்பின் காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் சில பகுதிகள் நீரால் சூழப்பட்டுள்ளன. தேசிய பேரிடர் மீட்புப் படையின் 3 குழுக்கள் உதவியுடன் 276 தாழ்வான பகுதிகளிலிருந்து பாதிக்கப்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
 
நவம்பர் 16 மற்றும் 17 தேதிகளில் கரை உடைப்பு ஏற்பட்ட ஏரிகள் கண்டறியப்பட்டு அவை போர்க்கால அடிப்படையில் சரி செய்யப்பட்டன. 117 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு 26,448 நபர்கள் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். 77,962 உணவுப் பொட்டலங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. 
 
தற்போது பூண்டி ஏரியிலிருந்து திறந்து விடப்படும் உபரி நீரின் அளவு 800 கன அடியாக குறைந்துள்ளதால், மாலைக்குள் நீரால் சூழ்ந்துள்ள பகுதிகள் இயல்பு நிலைக்கு திரும்பி விடும். சென்னை மாநகரில் நேற்று வரை மழைநீர் வெளியேற்ற இயலாத மவுண்ட் மற்றும் தில்லை கங்கா நகர் சுரங்கப் பாதைகளில் மழை நீர் வெளியேற்றப்பட்டு போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது. 
 
மழைநீர் அகற்றும் பணியில் 470 டீசல் பம்புகள், 56 சூப்பர் சக்கர்கள், 49 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் 74 ஜேசிபிக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.  மழைநீர் தேங்கியிருந்த 789 பகுதிகளில் 331 பகுதிகளில் நீர் வெளியேற்றப்பட்டு எஞ்சிய பகுதிகளில் மழைநீர் வெளியேற்றும் பணி போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றது. 
 
நவம்பர் 16 மற்றும் 17 தேதிகளில் அடையாறு ஆற்றின் கரையோரம் வசித்த 25,595 நபர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர். சென்னை மாநகரில் 76 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு 9,091 நபர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
 
இம்மையங்களில் 6,69,540 உணவுப் பொட்டலங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. 199 மருத்துவ முகாம்கள் மூலமாகவும, 17 நகரும் மருத்துவ குழுக்கள் மூலமாகவும் 36,040 நபர்களுக்கு மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது. 
 
சென்னை மாநகரில் மழை நீர் அதிகமாக தேங்கி இருந்த பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கையாக மின்சாரம் நிறுத்தப்பட்ட இடங்களில் மின்சாரம் மீண்டும் அளிக்கப்பட்டுள்ளது. வேளச்சேரி, நங்கநல்லூர் மற்றும் மடிப்பாக்கம் போன்ற பகுதிகளில் மழை நீர் அதிகமாக தேங்கியுள்ள ஒரு சில தெருக்கள் தவிர மற்ற பகுதிகளில் மின்சாரம் மீண்டும் அளிக்கப்பட்டுள்ளது.
 
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெருமழையால் பாதிக்கப்பட்ட காஞ்சிபுரம் நகரத்தில் மின்சாரம் மீண்டும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் தாம்பரம், முடிச்சூர், பெருங்களத்தூர் போன்ற பகுதிகளில் மக்களின் பாதுகாப்புக் கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சார விநியோகம் நிறுத்தப்பட்டது.
 
தற்பொழுது மழை நீர் வடியத் தொடங்கியுள்ளதால் மழை நீர் வடிந்த பகுதிகளில் படிப்படியாக மின்சாரம் மீண்டும் அளிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டின் பிற பகுதிகளிலிருந்து 500 மின்வாரிய பணியாளர்கள் இப்பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் மின்சார சீரமைப்புப் பணிகளை மேற்கொண்டு மின் விநியோகம் மீண்டும் வழங்கப்பட்டுள்ளது.
 
சுகாதாரத் துறை மூலம் சென்னை மாநகரட்சிப் பகுதிகளில் 216 மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு, மழை நீரால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு தேவையான மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டு தேவையான மருந்துகள் வழங்கப்பட்டு வருகின்றன.
 
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 106 மருத்துவ முகாம்கள் மற்றும் திருவள்ளுர் மாவட்டத்தில் 89 மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு, நோய் தடுப்பு நடவடிக்கைகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.  இவ்வாறு அந்த அறிக்கையில் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.