வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Updated : வியாழன், 12 நவம்பர் 2015 (09:33 IST)

மழையால் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும்: கருணாநிதி வலியுறுத்தல்

மழையின் காரணமாக இறந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ. 10 லட்சம் வழங்கவேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
 
தமிழகம் முழுவதும் கனமழை கொட்டித் தீர்த்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கையும், வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளன. நீலகிரி, ஏற்காடு, கொல்லிமலை பகுதிகளில் மண் சரிவு ஏற்பட்டதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
 
நீலகிரி மலை ரயில் தண்டவாளத்தில் பாறைகள் உருண்டு விழுந்துள்ளன. மரங்களும் வழியில் முறிந்து கிடப்பதால் மலை ரயில் 4 நாட்களாக ரத்து செய்யப்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்டம் முழுவதும் கடந்த இரண்டு நாட்களாக பெருமழை தொடர்ந்து பெய்து வருகிறது.
 
சேலம் மாநகரின் பல்வேறு பகுதிகளிலே மழை நீர் வடிந்தோடுவதற்கு வழியில்லாமல் வீடுகளுக்குள் புகுந்து விட்டதாகவும், பாம்புகளும், விஷ பூச்சிகளும் வீடுகளுக்குள் படையெடுத்து வருவதாகவும் பொது மக்கள் பயந்து கொண்டிருப்பதாகவும் செய்திகள் வந்தன.
 
சேலத்தை அடுத்த கன்னங்குறிச்சியில் ஏரி நிரம்பி, வெள்ள நீர் விவசாய நிலத்தில் புகுந்து, நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களில் பயிர்கள் நீரில் மூழ்கி குளம் போல் காட்சியளிக்கிறது.
 
விழுப்புரம் மாவட்டம், ரிஷிவந்தியத்தை அடுத்த கடம்பூர் பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களில் வாழை மரங்கள் முற்றிலும் சேதம் அடைந்துள்ளன.
 
திருக்கோவிலூர், சங்கராபுரம், கள்ளக்குறிச்சி, செஞ்சி, திண்டிவனம் ஆகிய பகுதிகளில் ஐந்து ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்களும், பத்தாயிரம் ஏக்கரில் நெல் மற்றும் கரும்பு பயிர்கள் மழைநீரில் மூழ்கி மிதக்கின்றனவாம். பாதிக்கப்பட்ட விளை நிலங்களை பார்வையிடவோ, விவசாயிகளைச் சந்திக்கவோ அரசு சார்பில் யாரும் வரவில்லை.
 
சென்னையிலோ கேட்கவே வேண்டியதில்லை. ஜெயலலிதா வெற்றி பெற்ற ராதாகிருஷ்ண நகர் தொகுதி உள்ளிட்ட பல பகுதிகளில் குடியிருப்புகளுக்குள் மழைநீர் புகுந்து மனித வாழ்க்கை பெரும் சோதனைக்குள்ளாகி விட்டது.
 
தரமணி பகுதியில் பெரியார் நகர், காந்தி நகர் உள்ளிட்ட இடங்களில் மழைநீர் குளம் போல் தேங்கியுள்ளதாம். பருவ மழை தொடங்குவதற்கு முன்பாக, தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டிய சென்னை மாநகராட்சி, ஜெயலலிதாவுக்குப் பாராட்டுத் தீர்மானங்கள் நிறைவேற்றுவதிலும், எதிர்க் கட்சிகளைத் தாக்கித் தரக்குறைவாகப் பேசுவதிலும் நேரத்தைக் கழித்த காரணத்தினால், பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுப்பதில் படுதோல்வி அடைந்துவிட்டது.
 
மாநகராட்சியின் அலட்சியத்தைக் கண்டித்து பல இடங்களில் மக்கள் சாலை மறியலிலே ஈடுபட்டுள்ளார்கள். சென்னையின் பல பகுதிகளிலே மரங்கள் முறிந்து விழுந்து, போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இன்னும் கொடுமை, மின்சாரம் பல இடங்களிலே "கண்ணாமூச்சி" விளையாட்டு விளையாடிக் கொண்டிருக்கிறது.
 
என்எல்சி நிறுவனத்தில் நிலக்கரி வெட்டும் பணி முடங்கியதால் 1,540 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்ல முடிய வில்லை. இந்த பெருமழை காரணமாக பலியானவர்கள் எத்தனை பேர் என்ற விவரமே அரசு சார்பில் இதுவரை தரப்படவில்லை. 13 பேர் என்றும், 20 பேர் என்றும் வெவ்வேறு தகவல்கள் தரப்படுகின்றன.
 
மழையினால் பெரிதும் பாதிக்கப்பட்ட கடலூரில் மாவட்டத்தில் மட்டுமே சுமார் 12 பேர் மழைக்குப் பலியாகி விட்டதாக செய்திகள் வந்தன. அண்டை மாநிலங்களோடு கலந்து பேசி குடிநீரோ, மின்சாரமோ பெற்றுத் தருவதிலும் ஜெயலலிதா அக்கறை காட்டவில்லை.
 
டெல்லி சென்று மத்திய அரசுடனும், பிரதமருடனும் விவாதித்து தமிழகத்துக்குத் தேவையான உதவிகள் எதையும் பெற்றுத்தரவில்லை. மக்களாட்சி எவ்வாறு வெறும் காணொலிக் காட்சியாக மட்டுமே தமிழகத்திலே நடைபெறுகிறது என்பதற்கான சான்றுகள்தான் இவை.
 
தற்போது பெய்த பெருமழை காரணமாக பாதிக்கப்பட்ட அனைத்துத் தரப்பு மக்களுக்கும், அரசின் சார்பில் உடனடியாக தேவையான உதவிகள் செய்யப்பட வேண்டும். உரிய முறையில் நிவாரணத் தொகைகள் வழங்கப்பட வேண்டும்.
 
மழையின் காரணமாக இறந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ. 10 லட்சம் உடனடியாக வழங்கப்பட வேண்டும். பயிர் நாசம் காரணமாக வேளாண்மை பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தகுந்த இழப்பீட்டுத்தொகை கொடுக்கப்படவேண்டும். வீடு இழந்த மக்களுக்கு தகுந்த உதவித் தொகை தரப்பட வேண்டும்.
 
மழை வெள்ளத்தின் தொடர்ச்சியாக, தொற்று நோய் பரவிட வாய்ப்புகள் அதிகம் என்பதால், "டெங்கு" பாதிக்கப்பட்டோர் பற்றிய பதிவுகளை ஆவணங்களிலிருந்து அகற்றியதைப் போன்ற ஆபத்தான காரியங்களில் ஈடுபடாமல், நோய்த் தடுப்பு நடவடிக்கைகளைத் திட்டமிட்டு உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.
 
திமுக சார்பில் மாவட்டக் கழகச் செயலாளர்கள் தலைமையில் அந்தந்த மாவட்ட திமுகவினர் பாதிக்கப்பட்டோருக்கு உதவிட வேண்டும். திமுக சார்பில், மழையின் காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் கருணாநித் கூறியுள்ளார்.