NDA கூட்டணியில் இன்னொரு கட்சி.. 6 தொகுதிகளில் போட்டியிட போவதாக அறிவிப்பு..!
தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ள நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்துள்ளன. கூட்டணியின் முக்கிய அங்கமான புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி, வரும் தேர்தலில் தனது கட்சி போட்டியிட விரும்பும் தொகுதிகள் குறித்து அதிரடியான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், "வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் என்.டி.ஏ கூட்டணியில் புரட்சி பாரதம் கட்சி 6 தொகுதிகளில் போட்டியிடத் திட்டமிட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.
தலித் மக்கள் மற்றும் அடித்தட்டு மக்களின் நலன்களுக்காக போராடி வரும் புரட்சி பாரதம் கட்சிக்கு, குறிப்பாக வட தமிழகத்தில் கணிசமான வாக்கு வங்கி உள்ளது. கடந்த காலங்களில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த இக்கட்சி, தற்போது என்.டி.ஏ என்ற மெகா கூட்டணியில் தனது பங்களிப்பை உறுதி செய்ய விரும்புகிறது. கட்சியின் வளர்ச்சி மற்றும் தொண்டர்களின் விருப்பத்தின் அடிப்படையில் இந்த 6 தொகுதிகள் என்ற இலக்கை நிர்ணயித்துள்ளதாக ஜெகன் மூர்த்தி விளக்கியுள்ளார்.
2026 தேர்தலில் புரட்சி பாரதம் கட்சிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள், வட மாவட்டங்களின் தேர்தல் முடிவுகளில் முக்கிய பங்கு வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Edited by Siva