1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: புதன், 9 மார்ச் 2016 (11:32 IST)

விஜய் மல்லையாவை தப்பிக்க விடக்கூடாது - பொதுத்துறை வங்கிகள்

விஜய் மல்லையா, நாட்டை விட்டுதப்பி ஓடாமல் இருக்க, உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று ஸ்டேட் பேங்க் தலைமையிலான பொதுத்துறை வங்கிகள் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
 

 
பிரபல மதுபான ஆலை அதிபரும், ‘கிங் பிஷர் ஏர்லைன்ஸ்’ உரிமையாளருமான விஜய் மல்லையா, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா உள்ளிட்ட 17 பொதுத்துறை வங்கிகளிடம், 6 ஆயிரத்து 963 கோடி ரூபாய் கடன் பெற்றுள்ளார்.
 
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியிடம் ரூ. 1,600 கோடி, பஞ்சாப் நேஷனல் மற்றும் ஐடிபிஐ வங்கிகளிடம் தலா ரூ. 800கோடி, பேங்க் ஆஃப் இந்தியாவிடம் ரூ. 650 கோடி, பேங்க் ஆஃப்பரோடாவிடம் ரூ. 550 கோடி, சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவிடம் ரூ. 410 கோடி என அவர் கடன் பெற்றுள்ளார்.
 
இவை தவிர யூகோ வங்கியில் ரூ. 320 கோடி, கார்ப்பரேஷன் வங்கியில் ரூ. 310 கோடி, மைசூரு ஸ்டேட் வங்கியில் ரூ. 150 கோடி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் ரூ. 140 கோடி, பெடரல் வங்கியில் ரூ. 90 கோடி, பஞ்சாப் & சிந்த் வங்கியில் ரூ. 60 கோடி, ஆக்சிஸ் வங்கியிடம் ரூ. 50 கோடியும் மல்லையா கடன் பெற்றுள்ளார்.
 
இந்த பல ஆயிரம் கோடி ரூபாய் கடனை திருப்பிச் செலுத்தாமல், நீண்டகாலமாக இழுத்தடிப்பு செய்து வருகிறார். இவ்விவகாரத்தில் மத்திய அரசு உறுதியான நடவடிக்கை எதையும் எடுக்காததால், அவரிடம் கடன் தொகையை வசூலிக்க வங்கிகளும் படாதபாடு பட்டுக் கொண்டிருக்கின்றன.
 
அண்மையில், வாராக்கடன் விவகாரத்தில் மத்திய ரிசர்வ்வங்கி, பொதுத்துறை வங்கிகளுக்கு காலக்கெடு விதித்து, கடனை வசூலிக்குமாறு உத்தரவிட்டது.
 
இதனால் வேறு வழியின்றி, வங்கிகள், கடந்த மாதம் விஜய் மல்லையாவின் பாஸ்போர்ட்டை முடக்கவும் அவரைக்கைது செய்யவும் கடன் மீட்பு ஆணையத்திடம் முறையீடு செய்தன.
 
இதன் அடுத்த நடவடிக்கையாக தற்போது, விஜய் மல்லையா வெளிநாடுகளுக்கு தப்பி ஓடிவிடாமல் தடுக்க, உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வங்கிகள் வழக்கு தொடர்ந்துள்ளன.
 
இந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.