ஈஷா மையம் ஆக்கிரமித்திருக்கும் 44 ஏக்கர் - எச்சரிக்கும் ஆதிவாசி மக்கள்


லெனின் அகத்தியநாடன்| Last Modified திங்கள், 17 அக்டோபர் 2016 (17:09 IST)
வருவாய்த்துறைக்கு சொந்தமான சுமார் 44 ஏக்கரை இதுவரை ஈஷா யோகா மையம் ஆக்கிரமித்து கட்டிடங்கள் கட்டி வருகிறது. இந்த நிலத்தை கைப்பற்றும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று  தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்தார்.
 
 
கோவையை அடுத்த வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் ஈஷா யோகா மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்திற்கு அருகே உள்ள முள்ளாங்காடு என்ற இடத்தில் அரசின் உபரி நிலம் 44 ஏக்கர் உள்ளது.
 
இந்நிலையில், ஈஷா யோகா மையம் அந்த 44 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து மின் வேலி அமைத்து கட்டிடங்கள் கட்டி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
 
இதனையடுத்து, ஞாயிறு அன்று முள்ளாங்காடு மற்றும் முட்டத்துவயல் ஆகிய பகுதியில் உள்ள ஆதிவாசி மக்கள் பங்கேற்ற சிறப்பு மக்கள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது.
 
இதில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் பெ.சண்முகம் பங்கேற்றார்.
 
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பெ.சண்முகம், ”ஈஷா யோகா மையம் சட்டவிரோதமாக அரசின் உபரி நிலத்தை ஆக்கிரமித்து கட்டுமான பணிகளை மேற்கொண்டு வருகிறது. அரசிற்கு எதிரான இந்த செயலை வருவாய்த்துறை அதிகாரிகள் தடுக்காமல் இருப்பதற்கு அரசு அதிகாரிகளும் ஈஷா மையத்ததுடன் கூட்டு வைத்திருக்கிறார்களோ என்கிற சந்தேகம் வருகிறது.
 
உடனடியாக மாவட்ட நிர்வாகம் இந்த 44 ஏக்கர் உபரி நிலத்தை மீட்டு ஏற்கனவே நிலம் கேட்டு மனு அளித்துள்ள மலைவாசி மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் இடத்தை அளந்து பிரித்து வழங்க வேண்டும். இல்லையென்றால், ஆதிவாசி மக்கள் குடும்பத்துடன் சென்று கைப்பற்றும் போராட்டம் நடத்துவோம்” என்று தெரிவித்து உள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :