விபச்சாரத்திற்காக விற்கப்பட்ட வெளிநாட்டு பெண்கள்

விபச்சாரத்திற்காக விற்கப்பட்ட வெளிநாட்டு பெண்கள்
Ilavarasan| Last Updated: செவ்வாய், 5 ஆகஸ்ட் 2014 (12:44 IST)
விபசாரத்துக்காக வெளிநாட்டு பெண்கள் 4 பேர், ரூ.4 லட்சத்திற்கு விலைக்கு விற்கப்பட்டனர். அவர்களை சிபிசிஐடி காவல்துறையினர் பத்திரமாக மீட்டனர். இது தொடர்பாக பெங்களூர் அழகி உள்பட 6 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
வங்காளதேச நாட்டைச் சேர்ந்த 4 இளம்பெண்கள், பெங்களூரில் விபசார தொழிலுக்கு விற்கப்பட்டனர். அந்த நாட்டைச் சேர்ந்த ராஜா என்ற ராஜா ஷேக் என்பவர், 4 பெண்களையும் நல்ல வேலையில் சேர்த்து விடுவதாக பெங்களூர் அழைத்து வந்தார். பின்னர் வேலை எதிலும் சேர்த்துவிடாமல், அந்த 4 இளம்பெண்களையும், தலா ரூ.1 லட்சத்திற்கு விலை பேசி, விபசார தொழிலுக்காக விற்று விட்டார்.

பெங்களூரைச் சேர்ந்த பிரபல விபசார தாதா மஞ்சுநாத், அந்த 4 இளம்பெண்களையும் விலைக்கு வாங்கினார். இந்த இளம்பெண்கள் மிகவும் கொடுமை படுத்தப்பட்டு, விபசாரத்தில் தள்ளப்பட்டனர்.
இந்த பெண்களில் ஒருவர் மதுரை விபசார தாதா வேல்ராஜிடமும், இன்னொரு பெண் காரைக்காலைச் சேர்ந்த பெண் விபசார தாதா கஜீதாபீவியிடமும் மறு விற்பனை செய்யப்பட்டனர். நாகப்பட்டினத்தைச் சேர்ந்த நாகலிங்கம் என்பவரும், ஒரு பெண்ணை மறு விலைக்கு வாங்கினார். இப்படி 4 பெண்களும் தமிழகம் மற்றும் காரைக்கால் விபசார தாதாக்களிடம் சிக்கித்தவித்தனர்.


இதுபற்றிய ரகசிய தகவல் சிபிசிஐடி விபசார தடுப்பு காவல்துறைக்கு தெரியவந்தது. சிபிசிஐடி டி.ஐ.ஜி. கணேசமூர்த்தி இது தொடர்பாக அதிரடி நடவடிக்கை எடுத்து, விபசாரத்தில் தள்ளப்பட்ட பெண்களை மீட்க உத்தரவிட்டார். கண்காணிப்பாளர் பெருமாள் மேற்பார்வையில், துணை கண்காணிப்பாளர் ராஜா சீனிவாசன், ஆய்வாளர் ஜான்விக்டர் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினார்கள்.
விபசாரத்தில் தள்ளப்பட்ட வங்காளதேச நாட்டு அபலைப்பெண்கள் 4 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். பெங்களூர் விபசார தாதா மஞ்சுநாத், மதுரை தாதாக்கள் வேல்ராஜ், சதீஷ், காரைக்கால் தாதா கஜீதாபீவி, நாகப்பட்டினம் நாகலிங்கம் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பெங்களூர் தாதா மஞ்சுநாத், பெங்களூரில் ஏடிஎம் மையங்களில் கொள்ளை அடித்த வழக்குகளில் சம்பந்தப்பட்டவர். விபசார தொழிலிலும் சாம்ராஜ்ஜியம் நடத்தி வந்தார்.
அவரது மனைவி கஜோலியை(வயது 28) காவல்துறையினர் தேடி வந்தனர். கஜோலியும் நேற்று முன்தினம் பெங்களூரில் கைது செய்யப்பட்டு, சென்னை அழைத்து வரப்பட்டார். மஞ்சுநாத் மட்டும் பெங்களூர் சிறையில் உள்ளார். கஜோலி உள்பட மற்ற அனைவரும், சென்னை புழல் மத்திய சிறையில் தள்ளப்பட்டனர்.

4 பெண்களையும் வேலை வாங்கித்தருவதாக ஏமாற்றி விலைக்கு விற்று விபசாரத்தில் தள்ளிய கொடூர தாதா ராஜாஷேக்கை சர்வதேச காவல்துறையினர் மூலம் கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாக, சிபிசிஐடி காவல்துறையினர் தெரிவித்தனர். மீட்கப்பட்ட பெண்கள், வங்காள தேசத்தில் உள்ள அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்றும், சிபிசிஐடி காவல்துறையினர் கூறினார்கள்.


இதில் மேலும் படிக்கவும் :