1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Prompt Action: Madurai Firefighters Rescue Fainted Elderly Man Following Urgent Emergency Call From Sweden

ஸ்வீடனில் இருந்து வந்த போன் கால்.. ஆபத்தில் இருந்த முதியவரை மீட்ட மதுரை தீயணைப்பு துறையினர்..!

மதுரை
மதுரை அண்ணா நகர் பகுதியில் தனியாக வசித்து வரும் முதியவர் ஒருவரை, ஸ்வீடனில் இருந்து வந்த அவசர அழைப்பின் பேரில் தீயணைப்புத்துறையினர் அதிவேகமாக சென்று பத்திரமாக மீட்டுள்ள நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியுள்ளது.
 
மதுரையை சேர்ந்த இந்த முதியவரின் மகன் ஸ்வீடன் நாட்டில் பணியாற்றி வருகிறார். அவர் தனது தந்தைக்கு வழக்கம்போல தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டுள்ளார். ஆனால், நீண்ட நேரமாகியும் தந்தை போனை எடுக்காததால் பதற்றமடைந்த மகன், உடனடியாக மதுரை தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி துறைக்குத் தகவல் கொடுத்து உதவி கோரியுள்ளார். வெளிநாட்டில் இருந்து வந்த இந்த அவசர அழைப்பை தொடர்ந்து, மதுரை தீயணைப்புத்துறையினர் சற்றும் தாமதிக்காமல் முதியவர் வசிக்கும் குடியிருப்பு பகுதிக்கு அதிவேகமாக விரைந்தனர்.
 
அங்கு வீட்டின் கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்று பார்த்தபோது, முதியவர் கழிவறை அருகே மயங்கிய நிலையில் ஆபத்தான கட்டத்தில் கிடந்துள்ளார். தீயணைப்பு வீரர்கள் அவரை உடனடியாக மீட்டு, முதலுதவி அளித்து சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 
 
துரிதமாக செயல்பட்டு, ஒரு முதியவரின் உயிரை காப்பாற்றிய மதுரை தீயணைப்புத்துறையினரின் இந்த மனிதநேயமிக்க செயலுக்கு தற்போது சமூக வலைத்தளங்களிலும் பொதுமக்கள் மத்தியிலும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
ஹார்ட் டிஸ்க் திருடிய கணினி பராமரிப்பாளர் கைது.. விசாரணையில் திடுக்கிடும் தகவல்?