வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Updated : திங்கள், 3 ஆகஸ்ட் 2015 (08:36 IST)

மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி நடத்தப்படும் முழு அடைப்பு போராட்டத்திற்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு

மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி, ஆகஸ்டு 4 ஆம் தேதி நடைபெறும் முழு அடைப்பை ஆதரிப்பதெனத் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது என்று காங்கிரஸ் கட்சியின் தமிழகத் தலைவர்  ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
 
இது குறித்து ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 
 
தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி, குமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் செல்போன் கோபுரத்தின் மீது ஏறிப் போராட்டம் நடத்திய காந்தியவாதி சசி பெருமாள் மரணத்தில் சந்தேகங்களும், மர்மங்களும் இருப்பதாக அவரது குடும்பத்தினர் கூறியுள்ளனர்.
 
இந்தச் சந்தேகங்களைப் போக்கவேண்டிய பொறுப்பு தமிழக அரசுக்கு இருக்கிறது. உயிர் நீத்த சசி பெருமாளின் தியாகத்தைக் கொச்சைப்படுத்துகிற வகையில் தற்கொலை செய்து கொண்டதாக வழக்கைப் பதிவு செய்வது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாகும்.
 
இந்தச் சம்பவத்திற்குத் தமிழக அரசுதான் முழுப்பொறுப்பாகும். தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி ஆகஸ்டு 4 ஆம் தேதி நடைபெறும் முழு அடைப்பை ஆதரிப்பதெனத் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி முடிவு செய்திருக்கிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் இளங்கோவன் கூறியுள்ளார்.
 
இதேபோன்று, முழு அடைப்பு போராட்டத்திற்கு தேமுதிகவும் ஆதரவு தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.