1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : செவ்வாய், 2 ஜூன் 2015 (13:23 IST)

அரை நாள் மட்டுமே வகுப்பு நடக்கும்; விளையாட்டு திடல், நூலகம், கேன்டீன் எதுவும் கிடையாது - தனியார் பள்ளி அட்டூழியம்

அரசு நிர்ணயித்த கட்டணத்தை செலுத்தும் மாணவர்களுக்கு அரை நாள் மட்டுமே பள்ளிக்கூடம் இயங்கும் என தனியார் பள்ளி அறிக்கை வெளியிட்டதால் பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டனர்.
 
சென்னை அடையாறு காந்தி நகரில் பால வித்யா மந்திர் பள்ளியில் சுமார் 1400க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளி நிர்வாகம் கடந்த வாரம் மாணவர்களின் பெற்றோர்களுக்கு பள்ளி நிர்வாகம் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
 
அதில், ‘நாங்கள் இரு விதியை கையாண்டுள்ளோம். அதில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை மட்டுமே கட்ட முடியும் என்று கூறக்கூடிய பெற்றோர்கள் முதல் விதியை தேர்வு செய்து கொள்ளலாம். அந்த விதியின்படி அரசு நிர்ணயித்த கட்டணத்தில் பள்ளியில் உள்ள பல்வேறு வசதிகளை எங்களால் செய்து தர முடியாது.
 
அவர்கள், வகுப்பறை மற்றும் பெஞ்ச் உள்ளிட்ட வசதிகளை பெற இயலும். நான்கரை மணி நேரம் (அரை நாள்) மட்டுமே வகுப்பு எடுக்க முடியும். நிர்வாகம் அறிவிக்கும் கட்டணத்தை செலுத்தக்கூடிய பெற்றோர்கள் 2ஆவது விதியை தேர்வு செய்யலாம்.
 
அதில், மாணவர்களுக்கு பள்ளியில் உள்ள விளையாட்டு திடல், நூலகம், கேன்டீன், இன்பச் சுற்றுலா, சிறப்பு வகுப்பு உள்ளிட்ட 59 வசதிகளை பெற முடியும்’ எனக் கூறப்பட்டிருந்தது. மிரட்டல் விடுக்கும் வகையில் வெளியான இந்தச் சுற்றறிக்கையைப் பார்த்ததும் பெற்றோர் கடும் அதிர்ச்சியும், கொந்தளிப்பும் அடைந்தனர்.
 
இதையறிந்த பள்ளி நிர்வாகம், மற்றொரு சுற்றறிக்கையை பெற்றோர்களுக்கு அனுப்பியது. அதில், ‘2 விதிகளில் எந்த விதியையும் நீங்கள் ஏற்றுக் கொள்ளாவிட்டால் முதல் விதிக்கு நீங்கள் சம்மதிப்பதாக எடுத்துக் கொள்வோம்’ எனக் கூறப்பட்டிருந்தது.
 
மேலும் அடுத்த ஆண்டு, முதல் விதியை கடைப்பிடிக்கும் மாணவர்களை பள்ளியை விட்டு நீக்கி விடுவதாக நிர்வாகம் முடிவு செய்திருப்பதாக பெற்றோர் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டது. நிர்வாகத்தின் இந்தச் செயலால் அதிர்ச்சியடைந்த பள்ளி ஆசிரியர்களும் பெற்றோர்களுக்கு ஆதரவாக களம் இறங்கினர். 
 
இதனால் அதிர்ச்சியடைந்த பள்ளி நிர்வாகம், முதல்வர், துணை முதல்வர் உள்ளிட்ட ஆசிரியர்களை பணிநீக்கம் செய்வதற்கான நடவடிக்கையை எடுப்பதாக தெரிகிறது. இந்நிலையில் அதிக கட்டணம் வசூலிப்பதை கண்டித்தும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுப்பதை கண்டித்தும் 400க்கும் மேற்பட்ட பெற்றோர்கள், திங்களன்று காலை பள்ளியை முற்றுகையிட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.