செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: செவ்வாய், 15 டிசம்பர் 2015 (11:27 IST)

மழையால் பாதித்த தமிழகம்; பொதுத்துறை நிறுவனங்கள் உதவ வேண்டும் : ராமதாஸ் கோரிக்கை

மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பொதுத்துறை நிறுவனங்கள் தத்தெடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.


 

 
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:
 
வரலாறு காணாத மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இயல்பு நிலை திரும்பி வருவதாக கூறப்படுகிறது. வெள்ளம் தேங்கி நின்ற சாலைகளும், பாதைகளும் காயத் தொடங்கி இருக்கலாம்; வீடுகளில் புகுந்த வெள்ளம் வேண்டுமானால் வடிந்திருக்கலாம். ஆனால், வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் சேதங்களில் இருந்து மக்களுக்கு மீண்டு வர இன்னும் பல ஆண்டுகள் ஆகும்.
 
வட கிழக்குப் பருவமழை தொடங்கியபின் சென்னையில் 3 கட்டங்களாக மழை பெய்தது. முதல் கட்டத்தில் கணிசமான அளவு பாதிப்புகள் ஏற்பட்டன. இரண்டாம் கட்ட மழையில் பெரிய பாதிப்புகள் ஏற்படாமல் சென்னை தப்பியது. மூன்றாவது கட்ட மழை சென்னை மட்டுமின்றி அதன் புறநகரான காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களிலும் கணிக்க முடியாத அளவுக்கு பாதிப்புகளையும், சேதங்களையும் ஏற்படுத்தியது.
 
கடலூர் மாவட்டம் இதுவரை ஏற்பட்ட இயற்கை சீற்றங்களில் சந்தித்ததை விட மிக மோசமான பாதிப்புகளை எதிர்கொண்டிருக்கிறது. வட மாவட்டங்கள் கடந்த சில வாரங்களாக எதிர்கொண்ட கடுமையான பாதிப்புகளை தென் மாவட்டங்கள் இப்போது எதிர்கொண்டு வருகின்றன.
 
சென்னையில் வீடுகளுக்குள் புகுந்த வெள்ளத்தால் ஆயிரக்கணக்கான வீடுகளில் பல லட்ச ரூபாய் மதிப்புள்ள வீட்டுப் பயன்பாட்டுப் பொருட்கள் சேதமடைந்தன. ஏராளமான வாகனங்கள் நீரில் மூழ்கி பயன்பாட்டுக்கு உதவாதவையாகிவிட்டன. ஆயிரக்கணக்கான வாகனங்கள் பழுதடைந்து விட்டன. அவற்றை சரி செய்வதற்கு பல நூறு கோடி ரூபாய் தேவைப்படும். பல லட்சம் ஏக்கரில் பயிர்கள் சேதமடைந்ததுடன், நிலங்களே பயன்படுத்த முடியாதவையாக மாறிவிட்டன.
 
இவை ஒருபுறமிருக்க ஈக்காட்டுத்தாங்கல், அம்பத்தூர் தொழிற்பேட்டை போன்ற பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள இயந்திரங்கள் சீரமைக்க முடியாத அளவுக்கு பழுதடைந்து விட்டன. இதனால் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். அவர்களின் குடும்பங்கள் பட்டினியில் வாடுகின்றன. இதேநிலை இன்னும் சில வாரங்கள் தொடரும் என தெரிகிறது.
 
மழை–வெள்ளம் ஏற்படுத்திய இந்த சேதத்தை யாராலும் முழுமையாக ஈடுகட்ட முடியாது. கிட்டத்தட்ட ஒரு லட்சம் கோடி ரூபாய் சேதம் ஏற்பட்டிருக்கும் என்று உத்தேசமாக மதிப்பிடப்பட்டுள்ள நிலையில், மத்திய அரசு வெறும் ரூ.1940 கோடி மட்டுமே நிதி உதவி செய்திருக்கிறது. அடுத்தக்கட்ட உதவிக்கான அறிகுறிகள் தென்படவில்லை. தமிழக அரசு ரூ.500 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்திருக்கிறது. இது யானைப்பசிக்கு சோளப்பொறி என்று கூட சொல்ல முடியாத அளவுக்கு மிகக்குறைவான உதவியாகும். மழைவெள்ளம் பெரும் சேதத்தையும், பாதிப்பையும் ஏற்படுத்தியிருப்பது மட்டுமின்றி, வாழ்வாதாரங்களை முற்றிலுமாக அழித்து விட்டதால் அடித்தட்டு மக்களின் எதிர்காலம் கேள்விக்குறி ஆகியிருக்கிறது.
 
வெள்ளத்தால் ஏற்பட்ட எல்லா பாதிப்புகளையும் அரசால் சரி செய்ய முடியாது என்ற நிலையில், இந்த பணியில் பொதுத்துறை நிறுவனங்களும், தனியார் துறை பெரு நிறுவனங்களும் தங்களை இணைத்துக் கொள்ள வேண்டும். இந்தியாவிலுள்ள 90 சதவீதம் பெரு நிறுவனங்களுக்கு தமிழகம் தான் மிகப்பெரிய சந்தையாக உள்ளது.
 
செல்பேசி நிறுவனங்கள் தொடங்கி நுகர்வோர் பயன்பாட்டு பொருள் உற்பத்தி நிறுவனம், வாகன தயாரிப்பு நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களின் மொத்த வருவாயில் 20 முதல் 25 சதவீதம் தமிழகத்திலிருந்து தான் கிடைக்கிறது. அவ்வாறு வாழ்வளித்த தமிழகம் இப்போது மோசமான சூழலில் உள்ள நிலையில் அதற்கு நன்றிக்கடன் செலுத்த வேண்டியது பெரு நிறுவனங்களின் கடமை ஆகும். எனவே, தமிழகத்தில் வணிகம் செய்யும் அனைத்து தனியார் நிறுவனங்களும் தலா ஓர் ஒன்றியத்தை தத்தெடுத்து அங்கு மறுவாழ்வு மற்றும் மறுசீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். இது தான் காலத்தினால் செய்யப்பட்ட ஞாலப்பெரிய உதவியாக இருக்கும்.
 
அதேபோல், மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களுக்கு இன்னும் கூடுதல் கடமை உள்ளது. உதாரணமாக நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் கடலூர் மாவட்ட மக்களின் நிலத்திலிருந்து தான் நிலக்கரி வெட்டி எடுத்து மின்சாரம் தயாரித்து ஆண்டுக்கு ரூ.1700 கோடி வரை லாபம் ஈட்டுகிறது.
 
எனவே, இந்த நிறுவனம் அதன் லாபத்தில் பாதியை மறுவாழ்வு மற்றும் மறு சீரமைப்பு பணிகளுக்காக நன்கொடை வழங்க வேண்டும். பெல், சென்னை பெட்ரோ கெமிக்கல் நிறுவனம், பாரத் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களும் நிவாரணப் பணிகளுக்கு பெருமளவில் உதவ வேண்டும். இந்த உதவிகள் தான் தமிழகத்தின் மீதான அவற்றின் அக்கறையை வெளிப்படுத்தும்" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.