வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Updated : வெள்ளி, 27 நவம்பர் 2015 (10:33 IST)

பொட்டு சுரேஷ் கொலை வழக்கு சிபிசிஐடி க்கு மாற்றம்: மதுரை மாநகர காவல்துறை ஆணையர் தகவல்

திமுக பிரமுகர் பொட்டு சுரேஷ் கொலை வழக்கு சிபிசிஐடி காவ்லதுறையினருக்கு மாற்றப்படுவதாக மதுரை மாநகர காவல்துறை ஆணையர்  சைலேஷ் குமார் யாதவ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து சைலேஷ் குமார் யாதவ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
 
திமுக பிரமுகர் பொட்டு சுரேஷ் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி அட்டாக் பாண்டி கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டார்.
 
அந்த வழக்கு தொடர்பாக அனைவரும் கைது செய்யப்பட்டு, அனைத்து பணிகளும் நிறைவடைந்துள்ளன. ஆனால் நீதிமன்றத்தில் தாக்கல் செய்வதற்கு சில ஆவணங்கள் தேவைப்படுகின்றன.
 
இதற்காக தனியாக ஒரு காவல்துறை ஆய்வாளரை நியமனம் செய்தால் மற்ற பணிகள் பாதிக்கப்படும். எனவே இந்த வழக்கு சிபிசிஐடி காவல்துறையினர் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
 
புதிய காவல்துறை அலுவலகம் கட்டும் பணிகள் நிறைவடைந்த நிலையில், அந்த அலுவலகத்தை பொதுப் பணித்துறையினர் ஒப்படைத்துவிட்டனர்.
 
அலுவலகத்திற்குத் தேவையான உபகரணங்கள் அனைத்தும் அங்கு வைக்கப்பட்ட பிறகு புதிதாக கட்டப்பட்டுள்ள ஆணையர் அலுவலகத்திற்குச் செல்வோம்.
 
கடந்த ஆண்டு 72 வார்டுகளில் (காவல்துறையின் பழைய எல்லை) 33 கொலைகள் நடந்தன. ஆனால் அதே பகுதியில் இந்த ஆண்டு 23 கொலைகள்தான் நடந்துள்ளன. 10 கொலைகள் குறைந்துள்ளன.
 
அதேபோல் விரிவாக்க பகுதியில் கடந்த ஆண்டை போலவே, இந்த ஆண்டும் 14 கொலைகள் நடந்துள்ளன. இதற்கு காரணம் பிரச்சினைகள் நடக்கும் போதே காவல்துறையினருக்கு அந்த பகுதியில் உள்ளவர்கள் உடனே தகவலை தெரிவிக்கின்றனர். இதனால் குற்றங்களை தடுக்க வாய்ப்புள்ளது.
 
கடந்த ஆண்டு 94 பேர் குண்டர் சட்டத்திலும், 6 பேர் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். நடப்பாண்டில் இன்று வரை 1,66 பேர் குண்டர் சட்டத்தில் கைதாகியுள்ளனர். 
 
கடந்த 10 ஆண்டுகளில் இதுபோல குண்டர் சட்டத்தில் அதிகம்பேர் கைது செய்யப்படவில்லை. இவ்வாறு அதிகமானவர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதால் நகரில் குற்ற சம்பவங்கள் குறைந்துள்ளன.
 
குறிப்பாக வாட்ஸ்அப், மாணவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதன் மூலம் அதிகமான தகவல்கள் எங்களுக்கு வருகின்றன. அதன்மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து வருகிறோம். இவ்வாறு சைலேஷ் குமார் யாதவ் கூறினார்.