"போர்க்களத்தில் ஒரு பூ" திரைப்படத்திற்கு தடை விதிக்க வேண்டும்: இசைப் பிரியாவின் குடும்பத்தினர் வழக்கு


Suresh| Last Updated: வியாழன், 28 ஜனவரி 2016 (16:09 IST)
இலங்கையில் நடந்த இறுதிக்கட்ட போரில் கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு தாயாரிக்கப்பட்ட "போர்க்களத்தில் ஒரு பூ" என்ற திரைப்படத்திற்கு தடைவிதிக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

 

 
இலங்கையில் நடந்த இறுதிக்கட்ட போரில், விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்த பலர் கொடூரமான முறையினல் கொலை செய்யப்பட்டனர்.
 
அப்போது, ஷோபா என்ற இசைப்பிரியா இலங்கை ராணுவத்தினரால் கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டார்.
 
இந்த கொடூர சம்பவத்தை மையமாக வைத்து, "போர்க்களத்தில் ஒரு பூ" என்ற பெரில் கே.கணேசன் என்பவர் திரைப்படம் ஒன்றை இயக்கியுள்ளார்.
 
ஏ.சி.குருநாத் செல்லசாமி என்பவர் இந்த படத்தை தயாரித்துள்ளார். இந்த படத்தில் பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட கொடூரமாக காட்சிகள் இடம் பெற்றுள்ளதால் இந்த படத்தை பொதுமக்களுக்கு திரையிட்டு காட்ட அனுமதிக்க முடியாது என்று சென்சார் போர்டு கடந்த ஆண்டு மே மாதம் உத்தரவிட்டது.
 
இதைத் தொடர்ந்து, இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த மேல்முறையீட்டு மனுவையும் சென்சார் போர்ட்டு மேல்முறையீட்டு குழு தள்ளுபடி செய்தது.
 
இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில், அந்த திரைப்படத்தின் இயக்குனர், தயாரிப்பாளர் ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கு நிலுவையில் உள்ளது.
 
இந்நிலையில், இலங்கை போரில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட இசைப் பிரியாவின் தாயார் வேதரஞ்சனி, சகோதரி தர்மினி வாகிசன் ஆகியோர் "போர்க்களத்தில் ஒரு பூ" படத்தை வெளியிட தடை விதிக்கவேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில் தனித்தனியாக மனுதாக்கல் செய்துள்ளனர்.
 
அந்த மனுவில் தர்மினி வாகிசன் கூறியிருப்பதாவது:–
 
நானும் என் தாயார் வேதரஞ்சனியும், 2009 ஆம் ஆண்டு இலங்கையில் நடந்த இறுதிக்கட்ட போரின் போது, இங்கிலாந்து நாட்டிற்கு வந்து விட்டோம்.
 
நான் எனது 3 குழந்தைகளுடன் வசிக்கிறேன். இந்நிலையில், என் தங்கை இசைப் பிரியா என்ற ஷோபா போர்களத்தில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கொண்டு "போர்க்களத்தில் ஒரு பூ" என்ற திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளதாக பத்திரிகைகள் மூலம் தெரிந்துக் கொண்டோம்.
 
அந்த திரைப்படத்தில், என்னையும், என் தங்கை இசைப் பிரியாவையும் போராளிகள் என்று சித்தரித்து இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
 
தற்போது போராளிகளை உலக நாடுகள் தீவிரவாதிகள் என்று அழைக்கின்றனர். இலங்கை போரினால் பாதிக்கப்பட்ட பலர் புலம் பெயர்ந்து பல்வேறு நாடுகளில் வாழ்கின்றனர்.
 
அவர்கள் நாகரீகமாகவும், மரியாதையுடனும் வாழ உரிமை உள்ளது. அதே உரிமை எங்களுக்கும் உள்ளது. ஆனால், இந்த திரைப்படம் வெளியானால், எங்கள் குடும்பத்துக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.
 
இந்திய நாட்டின் சட்டத்தின், கற்பழிக்கப்பட்ட பெண்ணின் எந்த ஒரு அடையாளத்தையும் ஊடகங்கள் மூலம் வெளியிடக்கூடாது. அவ்வாறு வெளியிட்டால் அது தண்டனைக்குரிய குற்றமாகும். எனவே, இந்த திரைப்படத்தை வெளியிட தடை விதிக்கவேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
 
இந்நிலையில், இந்த மனுவை விசாரித்த நீதிபதி கே.கே.சசிதரன் இந்த மனுவுக்கு பதிலளிக்குமாறு "போர்க்களத்தில் ஒரு பூ" படத்தின் இயக்குநர் கணேசன், தயாரிப்பாளர் குருநாத் செல்லசாமி ஆகியோர் பதிலளிக்க வேண்டும் என்று நோட்டீசு அனுப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :