1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. "Political Immorality": Senior Congress Leader Mani Shankar Aiyar Slams Alliance with Vijay's TVK

விஜய்யுடன் காங்கிரஸ் கைகோர்த்திருப்பதை அரசியல் ஒழுக்கக்கேடு: மணிசங்கர் அய்யர்

தமிழக அரசியல்
தமிழக அரசியல் களத்தில் ஏற்பட்டுள்ள அதிரடி மாற்றங்கள் குறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மணிசங்கர் அய்யர் முன்வைத்துள்ள விமர்சனங்கள் அக்கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன.  தவெக தலைவர் விஜய்யுடன் காங்கிரஸ் கைகோர்த்திருப்பதை "அரசியல் ஒழுக்கக்கேடு" என்று அவர் கடுமையாக சாடியுள்ளார்.
 
இது குறித்து அவர் கூறுகையில், "சுயராஜ்யம் என்பது அறநெறி சார்ந்த அரசாக இருக்க வேண்டும்" என்ற மகாத்மா காந்தியின் கொள்கையை, இன்றைய காங்கிரஸ் தலைமை காற்றில் பறக்கவிட்டுள்ளதாக குற்றம் சாட்டினார். 
 
பல ஆண்டுகளாக திமுக கூட்டணியில் அங்கம் வகித்த காங்கிரஸ், தற்போது திடீரென தவெக-வை ஆதரிப்பது என்பது வெறும் 'சந்தர்ப்பவாத அரசியல்' மட்டுமே என்று அவர் விமர்சித்தார்.
 
திமுக கூட்டணியை உடைக்கலாம் என்ற காங்கிரஸ் தலைமையின் 'அரசியல் சாதுர்யத்தனம்' தோல்வியடைந்துவிட்டதாக குறிப்பிட்ட அவர், கூட்டணியில் இருந்த மற்ற கட்சிகள் வெளியேறாத நிலையில், காங்கிரஸ் மட்டும் இப்போது ஒரு நிச்சயமற்ற அந்தரத்தில் தொங்கி கொண்டிருப்பதாக தெரிவித்தார். 
 
விஜய்யுடன் இணைந்த இந்த செயல் அறிவார்ந்த அரசியலா அல்லது நல்ல ஒழுக்கமா?" என்று கேள்வி எழுப்பிய மணிசங்கர் அய்யர், இத்தகைய கொள்கையற்ற போக்கினால் காங்கிரஸ் கட்சி ஒருபோதும் முன்னேற முடியாது என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். 
 
தற்போது உருவாகியுள்ள தொங்கு சட்டசபை சூழலில், காங்கிரஸ் கட்சியின் இந்த முடிவு அதன் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கியுள்ளதாக அவர் எச்சரித்துள்ளார்.
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
விஜய் வளர்வதை தடுக்க 'எதிரிக்கு எதிரி நண்பன்' பார்முலா.. அதிமுக ஆட்சிக்கு வெளியில் இருந்து திமுக ஆதரவு: எஸ்.வி. சேகர்