1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வெள்ளி, 31 ஜூலை 2015 (15:18 IST)

’மோசடி வழக்குகளில் சொத்துக்களை முடக்க காவல்துறைக்கு அதிகாரமில்லை’ - நீதிமன்றம்

மோசடி வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் சொத்துக்களை முடக்க காவல்துறைக்கு அதிகாரமில்லை என்று நீதிமன்றம் கூறியுள்ளது.
 
வி.சுந்தரம், மல்லிகா உட்பட பலர் கடந்த 2010ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் 2013ம் ஆண்டு மே மாதம் வரை 35 நபர்களிடம், ரூபாய் 1 கோடியே 66 லட்சத்து 54,015 யை வசூலித்து விட்டு, அதை திருப்பிக் கொடுக்கவில்லை என்று குற்றம் சுமத்தியுள்ளனர்.
 
இதனால், அவர்கள், மீது வி.சுந்தரம், மல்லிகா உட்பட பலர் மீது சீட்டு மோசடி வழக்கு ஒன்றை காவல் துறையினர் பதிவு செய்தனர். இதையடுத்து, சுந்தரம், மல்லிகா ஆகியோர் பெயரில் உள்ள சொத்துக்களை முடக்குவது குறித்து குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு, காஞ்சிபுரம் சார்பதிவாளருக்கு கடந்த ஜனவரி 8ஆம் தேதி கடிதம் எழுதியுள்ளார்.
 
இதையடுத்து, சென்னை ஐகோர்ட்டில் சுந்தரம், மல்லிகா ஆகியோர் மனு தாக்கல் செய்தனர். அதில், ‘சார்பதிவாளருக்கு, துணை போலீஸ் சூப்பிரண்டு கடிதம் எழுதியுள்ளதால், எங்களது சொத்துக்களை விற்பனை செய்ய முடியவில்லை’ என்று கூறியிருந்தனர்.
 
இந்த மனு நீதிபதி பி.என்.பிரகாஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘துணை போலீஸ் சூப்பிரண்டு இவ்வாறு கடிதம் எழுதி, சொத்துக்களை முடக்க அதிகாரம் எதுவும் இல்லை. அவரது கடிதத்தை ரத்து செய்ய வேண்டும்’ என்று கூறியிருந்தார்.
 
இதற்கு பதிலளித்த மாநில தலைமை குற்றவியல் அரசு வழக்கறிஞர், ‘மனுதாரர்கள் பதிவு செய்யப்படாத சீட்டு நிறுவனத்தை நடத்தி பலரிடம் பணம் வசூலித்து மோசடி செய்துள்ளனர். பணத்தை இழந்தவர்களின் நலன் கருதி, இவர்களது சொத்துக்களை முடக்க காவல்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பது குறித்து சார் பதிவாளருக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்’ என்று கூறினார்.
 
இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி பி.என்.பிரகாஷ் பிறப்பித்துள்ள உத்தரவில், ”மனுதாரரின் சொத்தை முடக்கப் போவதாக திரை மறைவு மிரட்டல் விடுத்து, சார்பதிவாளர் எந்த சட்டத்தின் கீழ் போலீஸ் துணை சூப்பிரண்டு கடிதம் அனுப்பினார்? இது எனக்கு ஆச்சரியத்தை அளிக்கிறது.
 
போதைப் பொருள் கடத்தல், பண மோசடி உள்ளிட்ட சட்டவிரோத செயல்களின் மூலம் ஒருவர் சொத்து சேர்த்து இருந்தால், அந்த சொத்தை முடக்க 1944ஆம் ஆண்டு குற்றவியல் சட்டத்தில் தமிழக அரசு திருத்தம் கொண்டு வந்துள்ளது. இந்த திருத்தச் சட்டம் 1997ஆம் ஆண்டு முதல் அமலுக்கு வந்துள்ளது.
 
இந்த சட்டத்திருத்தம் பிரிவு 3இன் படி, மத்திய, மாநில அரசுகள் மோசடி வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட தனி நபரின் சொத்துக்களை சம்பந்தப்பட்ட மாவட்ட நீதிமன்றம் மூலம் முடக்க முடியும். இதில் காவல்துறை அதிகாரிக்கு எந்த வேலையும் கிடையாது.
 
ஒரு கிரிமினல் வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட நபரின் சொத்துக்களை முடக்கி வைக்க காவல்துறை அதிகாரிக்கு அதிகாரம் இல்லை. காஞ்சிபுரம் பொருளாதார குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு, சொத்துக்களை முடக்கம் செய்வது குறித்து கடிதம் எழுத முடியாது” என்று கூறியுள்ளார்.