பாமக அன்புமணிக்கே! - மீண்டும் தெளிவுபடுத்திய தேர்தல் ஆணையம்.. என்ன செய்ய போகிறார் ராமதாஸ்?
பாட்டாளி மக்கள் கட்சியின் தலைமை பொறுப்பு குறித்து நிலவி வந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், தேர்தல் ஆணையம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் முக்கியமான விளக்கத்தை அளித்துள்ளது. பாமகவின் தலைவராக அன்புமணி ராமதாஸ் தேர்ந்தெடுக்கப்பட்டதையும், அவரது பதவிக்காலம் வரும் 2026-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை இருப்பதையும் தேர்தல் ஆணையம் தனது ஆவணங்களின் அடிப்படையில் தெளிவுபடுத்தியுள்ளது.
முன்னதாக, அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளின் உட்கட்சி விவகாரங்களில் தேர்தல் ஆணையம் முடிவெடுக்க முடியாது என்ற உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட மறுஆய்வு மனுவில், ஆணையம் தனது வலுவான வாதத்தை முன்வைத்தது.
ஒரு கட்சியில் பிளவு ஏற்படுவதற்கு முன்பாக சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், கட்சியின் தலைமையை அங்கீகரிக்க தங்களுக்கு அதிகாரம் உள்ளதாக ஆணையம் வாதிட்டது. இந்த வாதத்தை நீதிமன்றமும் ஏற்றுக்கொண்டது.
இந்த அறிவிப்பை தொடர்ந்து, தற்போதைய நிலையில் அன்புமணி ராமதாஸ் தலைமையிலான பாமகவே உண்மையான பாமக என்பது மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இது கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தரப்பிற்கு பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
Edited by Siva