வெள்ளி, 5 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 22 ஜூன் 2025 (12:04 IST)

நச்சு கிருமிகள் வெளியே சென்றுவிடும்.. பாமக விவகாரம் குறித்து தங்கர்பச்சான் கருத்து..!

நச்சு கிருமிகள் வெளியே சென்றுவிடும்.. பாமக விவகாரம் குறித்து தங்கர்பச்சான் கருத்து..!
சென்னை, தியாகராய நகரில் உள்ள சர்.பிட்டி தியாகராயர் அரங்கில் நடைபெற்ற வே.ஆனைமுத்து நூற்றாண்டு விழாவில், பிரபல திரைப்பட இயக்குனர் தங்கர் பச்சான் கலந்து கொண்டார். நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், பா.ம.க.வின் தற்போதைய நிலவரம் குறித்து தனது கருத்தை தெரிவித்தார்.
 
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கும், பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாசுக்கும் இடையே ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் மனக்கசப்பு கட்சியை மேலும் வலுப்படுத்துவதற்கான ஒரு நடவடிக்கை. பா.ம.க. என்பது ஒரு மக்கள் இயக்கமாக உருவானது. அனைத்து மக்களுக்காகவும் போராடக்கூடிய கட்சி. இதில் எந்த பின்னடைவும் ஏற்படக்கூடாது என்பதற்காகவே இந்த சில விஷயங்கள் இருவருக்கும் இடையே நடக்கின்றன," என்று குறிப்பிட்டார்.
 
மேலும், "பா.ம.க. முன்பைவிட இப்போது பலமாகி வருகிறது. பா.ம.க. தன்னை தற்போது புதுப்பித்து கொண்டிருக்கிறது. இயற்கைதான் இந்த ஏற்பாட்டை செய்திருப்பதாக நான் உணர்கிறேன். 
 
கட்சிக்குள் இருக்கும் 'நச்சுக் கிருமிகள்' வெளியே சென்றுவிடும். இனி பா.ம.க. மாற்று அரசியலை முன்னெடுக்கும். தற்போதுள்ள சூழலில், பா.ம.க.வின் வாக்காளர்கள் சிதறமாட்டார்கள்," என்றும் தங்கர் பச்சான் நம்பிக்கை தெரிவித்தார். அவரது இந்த கருத்துகள் அரசியல் வட்டாரத்தில் கவனத்தை பெற்றுள்ளன.
 
Edited by Siva