ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஜெயலலிதாவை எதிர்த்துப் போட்டியா?: ராமதாஸ் பதில்!

PMK founder Ramadoss
வீரமணி பன்னீர்செல்வம்| Last Modified வியாழன், 28 மே 2015 (13:36 IST)
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பாமக போட்டியிடுவது தொடர்பாக கட்சியின் நிர்வாகக்குழு ஆலோசித்து விரைவில் முடிவெடுக்கப்படும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.
 
 
பாமக மாநாட்டை வரும் ஜூலை 12 ஆம் தேதி கோவையில் நடத்த அக்கட்சி திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக இடம் தேர்வு செய்வது மற்றும் மாநாட்டு முன்னேற்பாட்டு பணிகள் குறித்து ஆலோசிக்க பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று கோவை வந்தார்.
 
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக கட்சியின் நிர்வாகக்குழு ஆலோசித்து முடிவு செய்யும். எங்கள் எம்.பி. தனது தொகுதி மேம்பாட்டு நிதியை திட்டங்களுக்கு எதுவும் ஒதுக்கவில்லை என்பது தவறான குற்றச்சாட்டு. அவர் நிதியினை மக்கள் திட்டங்களுக்கு ஒதுக்கியுள்ளார்.
 
அதிமுக -வின் ஆட்சி குறித்து கேட்கிறீர்கள். அது ஆட்சியே இல்லை. அவர்கள் சர்வாதிகாரமான ஆட்சியை நடத்தி வருகிறார்கள். கட்சியிலும் சர்வாதிகாரமாகவே அதிமுக -வின் செயல்பாடு உள்ளது.
 
சொத்துக்குவிப்பு வழக்கில் திமுக முறையீடு செய்ய வேண்டும் என சொன்னது நான் தான். என் யோசனையை ஏற்று அவர்கள் மேல்முறையீடு செய்தார்களா என தெரியவில்லை. ஆனால் அவர்கள் எடுத்தது நல்ல முடிவு" என்று கூறினார்.
 
பாஜக ஆட்சி ஏழை, எளிய மக்களுக்கு எதிராக செயல்படுவதாக கூறப்படுகிறதே என ராமதாசிடம் கேட்டபோது, அதற்கு நேரடியாக பதிலளிக்க மறுத்ததோடு, 'நாளை உங்களை சந்தித்து விரிவாக பேசுகிறேன்' என்றார்.


இதில் மேலும் படிக்கவும் :