1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Updated : செவ்வாய், 17 நவம்பர் 2015 (14:55 IST)

பக்தி பாடகர் பித்துக்குளி முருகதாஸ் காலமானார்

தமிழில் பக்தி பாடல்களை பாடும் பாடகர் பித்துக்குளி முருகதாஸ் உடல் நலக் குறைவால் இன்று அதிகாலை சென்னையில் காலமானார்.


 
 
முருகதாஸின் வயது 95. கோயம்புத்தூரில் பிறந்த இவர், தனது தாத்தாவிடம் பஜனை பாடல்களை பாட கற்றுக் கொண்டார். இளமையில் சுதந்திர போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்தி கொண்டார். அப்போது போலிசார் அவரை கடுமையாக தாக்கியதில் அவரது இடது கண் முற்றிலும் பாதிக்கப்பட்டு பார்வையை இழந்தார்.
 
அதன் பின், 1947ஆம் ஆண்டில் முருகதாஸ் தனது இசைப் பயணத்தை தொடங்கினார். ஆயிரக்கணக்கான பக்தி பாடல்களை எழுதி இசையமைத்து பாடியுள்ளார். அவற்றை சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கும் சென்று பாடியுள்ளார். அவருக்கு பித்துக்குளி என்ற பட்டத்தை பிரம்மானந்த பரதேசியார் என்ற புனிதர் வழங்கினார்.
 
ஆனந்த ஆசிரமத்தின் தலைவர் சுவாமி ராமதாஸ், இவருக்கு முருக கடவுளுக்கு பணி செய்பவர் என்ற பொருள் தரும் முருகதாஸ் என்ற பட்டத்தை வழங்கினார். 
 
பித்துக்குளி முருகதாஸ் என்று அழைக்கப்பட்ட இவர், இன்று அதிகாலை வயோதிகம் காரணமாக சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் மரணமடைந்தார்.