ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கில் கர்நாடகா அரசை எதிர்த்து மனு


லெனின் அகத்தியநாடன்| Last Modified செவ்வாய், 26 ஏப்ரல் 2016 (11:53 IST)
ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் கர்நாடகா அரசை, ஒரு தரப்பை ஏற்கக் கூடாது என்று உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
 
 
வருமானத்திற்கு அதிகமாக ரூ. 66 கோடி சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில், முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, சசிகலாவின் உறவினர்கள் இளவரசி, சுதாகரன் ஆகியோரை கர்நாடக உயர்நீதிமன்றம் விடுதலை செய்தது.
 
ஆனால், சொத்து மதிப்பை தவறாக கணக்கிட்டு, இவர்கள் விடுதலை செய்யப்பட்டிருப்பதாக கூறி கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் ஜெயலலிதா உள்ளிட்டோருக்கு தலா 4 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ஜெயலலிதாவுக்கு ரூ. 100 கோடியும் மற்ற மூவருக்கும் தலா ரூ. 10 கோடியும் அபராதம் விதித்து வழங்கியிருந்த தீர்ப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்று கர்நாடக அரசு தனது மனுவில் கூறியிருந்தது.
 
இம்மேல்முறையீட்டு மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட, நீதிபதிகள் பினாகி சந்திர கோஷ், அமிதவா ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு, தொடர்ந்து இவ்வழக்கை விசாரித்து வருகிறது.
 
இதில், முதலாவதாக கர்நாடக அரசுத் தரப்பில் மூத்தவழக்கறிஞர்கள் துஷ்யந்த் தவே, பி.வி.ஆச்சார்யா ஆகியோரும், மூல மனுதாரர் என்ற வகையில் சுப்பிரமணியசாமியும் தங்கள் தரப்பு இறுதிவாதத்தை முன்வைத்தனர்.
 
அதைத்தொடர்ந்து ஜெயலலிதா தரப்பில், மூத்தவழக்கறிஞர் நாகேஷ்வரராவ் இறுதிவாதத்தை எடுத்து வைத்தார். செவ்வாயன்று சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி சார்பில் வழக்கறிஞர் சேகர் நாப்தே தனது வாதத்தை முன்வைத்தார்.
 
இந்நிலையில், ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில், கர்நாடகா அரசை, ஒரு தரப்பை ஏற்கக் கூடாது என்று, உயர்நீதிமன்ற மதுரைக் கிளையைச் சேர்ந்த வழக்கறிஞர் ரத்னம் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
 
ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் கர்நாடகா அரசை ஒரு தரப்பாக ஏற்க முடியாது என்ற வகையில், அந்த அரசு சார்பில் சிறப்பு வழக்கறிஞராக பி.வி.ஆச்சார்யா நியமிக்கப்பட்டதும் செல்லாது என்றும் ரத்னம் தனது மனுவில் கூறியுள்ளார்.
 
இந்த மனு திங்களன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இம்மனு மீதான விசாரணையை 2 வார காலத்திற்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்


இதில் மேலும் படிக்கவும் :