வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: செவ்வாய், 14 ஜூன் 2016 (13:04 IST)

பேரறிவாளன் விடுதலை ஜெயலலிதாவின் கையில்: விரைவில் அறிவிப்பு!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் 25 ஆண்டுகளாக சிறயில் இருக்கும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை தற்போது தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் கையில் உள்ளது. இதனால் இந்த விவகாரம் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது.


 
 
கடந்த சனிக்கிழமை பேரறிவாளனின் தாய் அற்புதமாள் தலைமையில் அன்புமணி, சீமான், மல்லை சத்தியா, வன்னியரசு, சத்திய ராஜ் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் பங்கேற்ற பேரணி நடந்தது. பேரணியின் முடிவில் கோட்டையில் பேரறிவாளனை விடுதலை செய்ய மனு கொடுத்தனர்.
 
இந்த மனு முதல்வரின் பார்வைக்கு கொண்டு செல்லப்படும் எனவும், முதல்வர் ஜெயலலிதா இதற்கு நடவடிக்கை எடுப்பார் எனவும் உறுதியளிக்கப்பட்டது. இன்று டெல்லி சென்று பிரதமரை சந்திக்கும் முதல்வர் ஜெயலலிதாவின் கோப்புகளில் பேரறிவாளன் விடுதலை தொடர்பான கோப்பும் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
 
இன்று மாலை பிரதமரை சந்திக்கும் ஜெயலலிதா பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என பிரதமரை வலியுறுத்துவார் என அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
 
முதல்வரின் இந்த கோரிக்கையை பிரதமர் மோடி அவ்வளவு சீக்கிரம் நிராகரிக்க முடியாது. பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் சேர்த்து அதிமுகவுக்கு 50 எம்.பி.க்கள் இருக்கிறார்கள். காங்கிரஸ் கட்சிக்கு அடுத்தபடியாக மூன்றாவது பெரிய கட்சியாக இருக்கும் அதிமுக தயவில்லாமல் பாஜக மசோதாக்களை நிறைவேற்றுவது கடினம்.
 
பல கடினமான சூழ்நிலைகளில் அதிமுக தயவில்லாமல் பாஜக செயல்பட முடியாது. பாராளுமன்றத்தையே முடக்கும் அளவுக்கு இரு அவைகளிலும் கனிசமான உறுப்பினர்களை அதிமுக வைத்துள்ளதால், முக்கியமான மசோதாக்கள் நிறைவேற்றும் போது அதிமுகவால் சிக்கல் வரக்கூடாது என்பதற்காக பாஜக தமிழக அரசிடம் முரண்டு பிடிக்காது என அரசியல் நோக்கர்கள் கூறுகிறார்கள்.
 
மேலும், தேர்தலுக்கு பின்னர் அதிமுக, பாஜக இணைந்து வருவது போல் தோற்றம் இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது. சமீபத்தில் பேசிய பாஜக தமிழக தலைவர் தமிழிசையும் பேரறிவாளன் விவகாரத்தில் ஆதரவாக பேசியுள்ளார்.
 
இந்நிலையில் டெல்லியில் இன்று பிரதமரிடம் இது குறித்து முதல்வர் ஜெயலலிதா பேசும் போது விடுதலை தொடர்பான சாத்தியமான பதில் கிடைக்கும் என பேசப்படுகிறது. பேரறிவாளன் விடுதலையா, இல்லையா என்பது தொடர்பான அறிவிப்பு இன்று இரவு அல்லது நாளை முதல்வர் ஜெயலலிதா வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.