செவ்வாய், 16 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: செவ்வாய், 24 நவம்பர் 2015 (21:08 IST)

மாற்றத்திற்குப் பதில் ஏமாற்றத்தையே சந்தித்ததன் விளைவை மக்கள் அனுபவிக்கிறார்கள் - கி.வீரமணி

மாற்றத்திற்குப் பதில் ஏமாற்றத்தையே சந்தித்ததன் தவிர்க்க இயலாத விளைவை இன்று அனுபவித்துக் கொண்டுள்ளனர் மக்கள் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி கூறியுள்ளார்.
 

 
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர்ந்து பெய்யும் மழை காரணமாக, சென்னையும், புறநகர்ப் பகுதிகளும் அதில் வதியும் மக்களும், வார்த்தைகளால் வர்ணிக்கப்படவே முடியாத துயரத்தையும், துன்பத்தையும், பட்டினியையும், பயத்தையும், கோபத்தையும் பெற்றுள்ள - ஏழை, எளிய நடுத்தர மக்கள், தாய்மார்கள் கதறும் காட்சியும், விடும் கண்ணீரும் மழை நீரை விடக் கொடுமையானவை.
 
சென்ற சட்டமன்றத் தேர்தலுக்கும், கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கும் ஒரு வகை ஒற்றுமை உண்டு. மாற்றம் வேண்டும் என்று நினைத்து, தங்கள் தலையில் கொள்ளிக்கட்டையை எடுத்துச் சொரிந்து கொண்டு மாற்றத்திற்குப் பதில் ஏமாற்றத்தையே சந்தித்ததன் தவிர்க்க இயலாத விளைவை இன்று அனுபவித்துக் கொண்டுள்ளனர் மக்கள்.
 
‘ஆனந்த விகடன்’, ‘ஜூனியர் விகடன்’ போன்ற ‘பொது நிலை ஏடுகள்’ கூட, இந்த மழை, வெள்ளத்தில் ஆட்சித் தலைமையும், அரசு இயந்திரமும் எப்படி செயலற்று ‘ஒப்புக்குச் சப்பாணி’யாக அமைந்துள்ளன என்று விளக்கி; மழை சென்னையை விளாசித் தள்ளியுள்ளது போலவே விமர்சித்துள்ளன!
 
நம்மைப் போன்றவர்கள் கூறினால் அதற்கு ஒரு முத்திரை குத்தி விடுவார்கள்! ஆனால், பொதுவானவர்கள் கருத்துக்களையாவது, வெறுப்பை - கோபத்தை உமிழாமல் ஆராய்ந்து சீர்தூக்கிப் பார்த்து தங்களது ஆட்சிக்கான அவப் பெயரை - கறையைத் துடைக்க முன் வர வேண்டாமா?
 
முன் கூட்டியே வானிலை அறிவிப்பை, மக்களைவிட அரசு இயந்திரம் தெரிந்தும்கூட - வருமுன் காப்பதற்கான பேரிடர் நிவாரணத்தை வேகமாக முடுக்கி விட்டிருந்தால், இந்த அளவுக்கு மக்களின் கண்ணீர் வெள்ளம், மழைத் தண்ணீர் வெள்ளத்தையும் மிஞ்சும் நிலைமை ஏற்பட்டிருக்குமா?
 
இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பா ரிலானும் கெடும்                 (குறள் 448)
 
இடித்துக்கூட அதிகாரிகள் சொல்வதில்லை. சொல்லவே அஞ்சும் ஒரு “விசித்திர வாயடங்குச் சட்டம்” - போடாமலேயே இப்படி ஒரு நிலை! இதன் விளைவு? இன்னும் ஆறு மாதங்களில் தெரியும். வாக்காளரை எளிதில் விலைக்கு வாங்கிவிடலாம் என்பது இம்முறை நடக்குமா என்பது சந்தேகமே!
 
சில எதிர்க்ககட்சிகளை வாங்கி விடலாம்; அது எளிது; மக்கள் நெஞ்சில் ஒரு எரிமலை கனன்று கொண்டுள்ளதே!
 
இன்னமும் காணொலிக் காட்சிகளும், மக்களிடம் இறங்கி வந்து ஆறுதல் கூற முடியாத நிலையும் ஜனநாயகத்தில் இருந்தால் - அது எப்படி உண்மையான மக்கள் நல ஆட்சியாக இருக்க முடியும்?
 
ஆட்சித் தலைமை, முதலமைச்சர் மக்களைச் சந்தித்தாரா என்று எதிர்க்கட்சியினர் கேட்டபோது, அவரது தொகுதிக்கு மட்டும் சென்று, காரை விட்டு இறங்காமலேயே ‘3 மாதம் பெய்ய வேண்டிய மழை, மூன்று நாள்களில் பெய்து விட்டது - யாமிருக்க பயமேன்?’ என்று பேசிவிட்டுத் திரும்பி விட்டால் போதுமா என்று எதிர்க்கட்சிகளும், ஏடுகளும் கேட்பதில் நியாயம் இல்லை என்று அலட்சியப்படுத்தி விட முடியுமா?
 
“அதிகாரிகள் எவரும் எங்களிடம் வந்து ஏன் என்று கூட கேட்டு எந்த உதவியும் செய்யவில்லை” என்று கண்ணீரும், கம்பலையுமாக கதறுகிறார்களே! அது கூட அரசியல் தானா? எதிர்க்கட்சி சூழ்ச்சியா? அதில் பெரும்பாலோர் ஆளுங் கட்சிக்கு வாக்களித்தவர்கள் என்பதை மறந்து விடலாமா?
 
திமுக சார்பில் ஒரு கோடி ரூபாய் வெள்ள நிவாரண நிதியாக அளிக்க முன் வந்தும், அதனைப் பெற்றுக் கொள்வதில்கூட தயக்கமும், தாமதமும் காட்டியது சரியானதுதானா? திமுக தலைவர் அதுகுறித்து அறிக்கை வெளியிட்ட பிறகே அவசர அவசரமாக நிதித்துறை செயலாளர் பெற்றக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டது என்பது ஆரோக்கியமானது தானா?
 
எதிலும் அரசியல் என்பது கட்சிக்குக்கூட ‘சரியாக’ இருக்கலாம்; ஆட்சிக்கு இருக்கக் கூடாது - கூடவே கூடாது. இதுவே முதலாவதாகவும், முடிவானதாகவும் இருக்கட்டும்” என்று கூறியுள்ளார்.