மூன்று மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்து தற்கொலை செய்து கொண்ட பெற்றோர்

லெனின் அகத்தியநாடன்| Last Modified வியாழன், 28 மே 2015 (16:46 IST)
பழனி அருகே மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு விஷம் கொடுத்துக் கொன்றுவிட்டு, பெற்றோர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
கீரனூர் மார்க்கண்டேயபுரத்தைச் சேர்ந்தவர் முருகேசன் (50), விவசாயி. இவரது மனைவி கிருஷ்ணவேணி(40). இவர்களுக்கு தேன்மொழி (19), வசந்தி (17) ஆகிய 2 மகள்களும், வசந்தகுமார் (14) என்ற மகனும் இருந்தனர்.

இவர்கள் 3 பேரும் மாற்றுத்திறனாளிகள் ஆவர். மூத்த மகள் தேன்மொழி 3ஆம் வகுப்பு வரை படித்துள்ளார். அவருக்கு மாலைக்கண் நோய் பாதிப்பு உள்ளது. இரண்டாவது மகள் வசந்தி பனிரெண்டாம் வகுப்பு வரை படித்துள்ளார்.
சரியாக நடந்துசெல்ல முடியாத காரணத்தால் 3 பேரும் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்தனர். பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் சரியாகாததால் குடும்பத்தினர் மனமுடைந்தனர்.

இந்நிலையில் முருகேசன், கிருஷ்ணவேணி தங்களது குழந்தைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு, தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர். தோட்டத்து வீடு என்பதால் இவர்களது மரணம் குறித்து யாருக்கும் உடனடியாக தெரியவில்லை.
புதனன்று காலையில் தோட்டத்துக்கு வேலைக்கு வந்தவர்கள் வீட்டின் கதவு திறக்கப்படாததைக் கண்டு உள்ளே பார்த்துள்ளனர். அனைவரும் இறந்து கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதன் பின்னர் கீரனூர் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

உடனே சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் அவர்களது உடல்களை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.


இதில் மேலும் படிக்கவும் :