“காமாலைக் கண்ணுக்கு கண்டதெல்லாம் மஞ்சள்”: கருணாநிதி மீது ஓ.பி.எஸ். கடும் தாக்கு!

வீரமணி பன்னீர்செல்வம்| Last Updated: செவ்வாய், 3 பிப்ரவரி 2015 (18:51 IST)
இந்தக் கூட்டத்தின் நோக்கம் பற்றியும், பிரதமருக்கு நான் எழுதிய கடிதம் பற்றியும் சரியாக புரிந்து கொள்ள இயலாத திமுக தலைவர் கருணாநிதி “அகதிகள் பிரச்சனையில் அதிமுக அரசின் பொறுப்பற்ற செயல்!” என்ற தலைப்பில் ஒரு வெற்று அறிக்கையை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கை பல்வேறு முரண்பாடுகள் நிறைந்துள்ளதாக உள்ளது.
அறிக்கையின் தொடக்கத்திலேயே என்னை மற்றவர்கள் எவ்வாறு மதித்து வருகிறார்கள் என்று சம்பந்தமே இல்லாமல் ஒரு கருத்தை தெரிவித்துள்ளார் கருணாநிதி. இது “காமாலைக் கண்ணுக்கு கண்டதெல்லாம் மஞ்சள்” என்ற பழமொழியைத் தான் நினைவுபடுத்துகிறது. தற்போது திமுக தலைவர் கருணாநிதிக்கு அவரது கட்சிக்குள்ளேயே என்ன மதிப்பும், மரியாதையும் உள்ளது என்பதை தமிழகமே நன்கு அறியும். இதனால், மன உளைச்சலுக்குள்ளாகியுள்ள கருணாநிதி, மற்றவர்கள் மதிக்கப்படவில்லை என்று கூறிக்கொண்டு தனக்குத் தானே ஆறுதல் தேடிக்கொள்கிறார்.
அவரவர்க்கு உரிய மரியாதை அவரவர்க்கு கிடைக்கப் பெறும் என்பதை தந்தையும் தனயனும் புரிந்து கொள்ள வேண்டும்.

தனது அறிக்கையில் என்ன சொல்ல வருகிறோம் என்பது கருணாநிதிக்கு புரியாததால் அவர் தன்னையும் குழப்பிக் கொண்டு, பிறரையும் குழப்ப முற்பட்டுள்ளார் என்பது அவரது அறிக்கையிலிருந்து தெள்ளத் தெளிவாக தெரிகிறது. “இலங்கை அகதிகளும், இலங்கையிலே முன்னாள் அதிபர் ராஜபக்சே அரசின் கொடுமையினால் புலம் பெயர்ந்து வாழும் இலங்கைத் தமிழர்களும், தாங்கள் மீண்டும் தாயகம் திரும்பி, நிம்மதியாக வாழ வேண்டும் என்று விரும்புவது ஒரு புறம் இருந்தாலும், தற்போது அப்படி அங்கே சென்றால் அமைதியான வாழ்வுக்கான வழி ஏற்படுமா? அல்லது முன்பு போலவே கொடுமை தொடருமா? என்றே தெரியாத நிலையில்; இலங்கைக்கு திரும்பினால் என்ன நடக்கும்? என்பது தெளிவற்ற தெரியாத நிலையில்……”
மத்திய அரசு இந்தக் கூட்டத்தை கூட்டியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இவ்வாறு தெரிவித்துவிட்டு, ஆனாலும், மத்திய அரசு கூட்டிய அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளாதது அதிமுக அரசின் பொறுப்பற்ற செயல் என்று கூறுவது எத்தகைய இரட்டை வேடம். இங்கே உள்ள இலங்கை அகதிகளை உடனடியாக இலங்கைக்கு திருப்பி அனுப்பிவிட வேண்டும் என்று துடிக்கிறார் கருணாநிதி.
இலங்கை முகாம்களில் உள்ள தமிழர்கள் முதலில் தங்களது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அதன் பின்னரே, இங்கே உள்ள இலங்கை அகதிகளை திருப்பி அனுப்புவதற்கான கூட்டம் நடத்தப்படவேண்டும் என்பது தான் எங்களது நிலைப்பாடு.

தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்பட வேண்டும் என்ற கருத்தை கருணாநிதி எப்பொழுது மாற்றிக் கொண்டார்? இலங்கை அகதிகளை கட்டாயப்படுத்தி திருப்பி அனுப்பிவிட வேண்டும் என்ற முடிவை எப்போது எடுத்தார்? என்பதை அவர் தான் விளக்க வேண்டும். இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்கள் காரணமாக தமிழர்களுக்கு நன்மை ஏற்படும் என்ற நம்பிக்கை இருந்தாலும், அந்த நம்பிக்கை செயல் வடிவம்
பெற வேண்டும். அதன் பின்னரே, இங்கேயுள்ள இலங்கை அகதிகள், தாயகம் திரும்புவது பற்றி எவரும் சிந்திக்க இயலும்"
என்று பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :