வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Annakannan
Last Modified: புதன், 29 அக்டோபர் 2014 (18:19 IST)

விவரம் தெரியாமல் வெற்று அறிக்கை - கருணாநிதிக்கு ஓ.பன்னீர்செல்வம் பதில்

அமைச்சர்களோ, அதிகாரிகளோ வெள்ளப் பகுதிகளைப் பார்வையிடவில்லை என்ற கருணாநிதியின் குற்றச்சாட்டுக்குத் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பதில் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:
 
“பதவி நிலைத்திடவாவது; பதறி எழுவீர்” என்ற தலைப்பில் தி.மு.க. தலைவர் கருணாநிதி அறிக்கை வெளியிட்டுள்ளது, மக்களை ஏமாற்றியாவது பதவியை அடைந்திட இயலுமா என்ற பதற்றத்தில் எழுதியுள்ள அறிக்கையாகவே அமைந்துள்ளது.
 
புரட்சித் தலைவி அம்மாவின் வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு, வடகிழக்குப் பருவமழை தொடங்குவதற்கு முன் எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், வடகிழக்குப் பருவமழை தொடங்கிய பின் எடுத்த மீட்பு நடவடிக்கைகள், நிவாரண நடவடிக்கைகள், பாதுகாப்பு நடவடிக்கைகள் ஆகியவற்றைப் பற்றி அறிந்து கொள்ளாமல், ஒரு வெற்று அறிக்கையை அரசியல் ஆதாயம் தேட வேண்டும் என்ற எண்ணத்தில், வெளியிட்டு இருக்கிறார்.
 
கருணாநிதி தனது அறிக்கையில், அமைச்சர்களோ, அதிகாரிகளோ வெள்ளப் பகுதிகளைப் பார்வையிடவில்லை என்று கூறி இருக்கிறார். மழையினால் பாதிக்கப்பட்டுள்ள 20 மாவட்டங்களுக்கு உயர் அதிகாரிகள் அனுப்பப்பட்டு, அவர்கள் அங்குள்ள வெள்ளப் பகுதிகளைப் பார்வையிட்டு, அங்கு நடைபெற்ற மீட்பு, பாதுகாப்பு மற்றும் நிவாரணப் பணிகளையும் உன்னிப்பாகக் கவனித்தனர். புரட்சித் தலைவி அம்மாவின் வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசின் துரித நடவடிக்கை காரணமாகத் தான் திண்டுக்கல் மாவட்டம் காளிப்பட்டியில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய 10 நபர்கள் ஹெலிகாப்டர் உதவியுடன் மீட்கப்பட்டனர்.
 
அமைச்சர்கள் நத்தம் விசுவநாதன், வளர்மதி, காமராஜ், சம்பத், வேலுமணி, சின்னைய்யா, ஜெயபால், ரமணா, ஆனந்தன், தோப்பு வெங்கடாசலம், அப்துல் ரஹீம், மேயர் சைதை துரைசாமி ஆகியோர் சென்னை மற்றும் இதர மாவட்டங்களில் வெள்ளப் பகுதிகளைச் சென்று பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்துள்ளனர்.
 
அமைச்சர்கள் வைத்திலிங்கம், உதயகுமார், விஜயபாஸ்கர் ஆகியோர் அவர்கள் துறை சார்பான அதிகாரிகளின் கூட்டத்தைக் கூட்டி, தக்க பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படுவதை உறுதி செய்துள்ளனர். இது தவிர, மாநகராட்சிகளின் மேயர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகளும் வெள்ளப் பகுதிகளைப் பார்வையிட்டு மக்களுக்கு ஆறுதல் கூறியதோடு, தக்க நடவடிக்கைகள் எடுக்கப்படவும் உறுதுணையாக இருந்துள்ளனர்.
 
டெல்டா மாவட்டங்களில் 6 லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளதாகத் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார் கருணாநிதி. இது உண்மைக்கு மாறான தகவல். உண்மை நிலை என்னவென்றால், சுமார் 53,000 ஏக்கர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்டுள்ள பயிர்கள் மட்டுமே நீரில் மூழ்கி உள்ளதாக தகவல் வரப் பெற்றுள்ளது. வெள்ள நீர் வடிந்த பிறகு பயிர்ச் சேதம் குறித்து ஆய்வு செய்யப்பட்டு, அதன் அடிப்படையில் உரிய நிவாரணத் தொகை வழங்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
 
கருணாநிதி மேலும் தனது அறிக்கையில், சென்ற மழையின் போது திருவாரூர் கமலாலயத்தின் வடக்குக் கரை இடிந்து விழுந்ததாகவும், அந்தப் பணிக்காக சட்டமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து நிதி ஒதுக்குவதாக கூறியதாகவும் தெரிவித்து இருக்கிறார். இதே கருத்தை மு.க.ஸ்டாலினும் தெரிவித்து இருக்கிறார்.
 
வடக்குக் கரைப் பகுதியைச் சீரமைப்பதற்காக அரசின் சார்பில் 1 கோடியே 6 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, அதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். தற்போது இடிந்து விழுந்துள்ள மேற்குக் கரை பகுதியைப் பொறுத்த வரையில், அதைச் சீரமைப்பதற்கான ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட உள்ளன. விரைவில் இப்பணியும் மேற்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்படும்.
 
கனமழை காரணமாகச் சென்னை மாநகரிலும் அதன் சுற்றுப் பகுதிகளிலும் உள்ள சாலைகள் பழுதடைந்து உள்ளதாகவும், சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளதாகவும், சுகாதாரச் சீர்கேடு தலைதூக்கியுள்ளதாகவும் கருணாநிதி தனது அறிக்கையில் கூறியுள்ளார். கனமழை பெய்யும் போது சாலைகள் பழுதடைவது என்பது இயற்கையான ஒன்று தான். சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 797 சாலைகளில் 3070 இடங்களில் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டு, அவற்றில் 2505 இடங்களில் உள்ள பள்ளங்கள் செப்பனிடப்பட்டுள்ளன. மீதமுள்ள பள்ளங்களைச் செப்பனிடும் பணி நடைபெற்று வருகிறது. இதே போன்று, கனமழை பெய்யும் போது சாலைகளிலும், சுரங்கப் பாதைகளிலும் நீர் தேங்கும் நிலை ஏற்படும்போது, அவற்றை உடனடியாக வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகள் சென்னை மாநகராட்சி நிர்வாகத்தால் எடுக்கப்பட்டுள்ளன. கனமழை காரணமாக காய்ச்சல் ஏற்படா வண்ணம், அதற்குத் தேவையான நடவடிக்கைகளை சென்னை மாநகராட்சியின் சுகாதாரத் துறையும், தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வுத் துறையும் எடுத்துள்ளன.
 
சென்னையைத் தவிர பிற மாவட்டங்களில் 4,765 கிலோ மீட்டர் நீளச் சாலைகள் கனமழையில் சேதமடைந்துள்ளன. அவற்றைச் செப்பனிடுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. சாலைகளைச் செப்பனிடுவதற்காகவும், குளங்களைச் சீரமைப்பதற்காகவும் 60 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
 
தற்போதைய கன மழைக்குத் தமிழ்நாட்டில் இதுவரை 30 பேர் பலியாகியுள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத் தேவையான நிவாரண உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. முழுமையாகவும் பகுதியாகவும் சேதமடைந்த குடிசை வீடுகளுக்கும் நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளது. இதேபோன்று, கால்நடைகளை இழந்த உரிமையாளர்களுக்கும் தேவையான நிவாரண உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
 
கருணாநிதி தனது அறிக்கையில், ரோமாபுரி தீப்பற்றி எரியும்போது பிடில் வாசித்துக் கொண்டிருந்த நீரோவைப் போல, மாநகர மக்கள் எண்ணற்ற பிரச்சனைகளினால் திக்கித் திணறிக் கொண்டிருக்கும்போது, மேயர் சாதனை சாகசத்தில் சந்தோஷப்பட்டு இருக்கிறார் என்று கூறியிருக்கிறார். சென்னை மாநகராட்சியின் மூன்றாண்டுச் சாதனைகளை பட்டியலிடுவது என்பது வேறு. கனமழை காரணமாக ஏற்படும் பாதிப்புகளைச் சரிசெய்வது என்பது வேறு. இந்த இரண்டு பணிகளையும் செவ்வனே நிறைவேற்றிக் கொண்டிருக்கின்றது சென்னை மாநகராட்சி.
 
எனவே, அரசியல் ஆதாயத்திற்காக பொய்க் குற்றச்சாட்டுகள் கூறுவதைக் கருணாநிதி நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
 
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.