வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Updated : வியாழன், 9 பிப்ரவரி 2017 (12:51 IST)

சசிகலாவை வீழ்த்த ஓ.பி.எஸ்-ற்கு 18 எம்.எல்.ஏக்கள் போதும்....

தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு, அதிமுக எம்.எல்.ஏக்கள் 18 பேரின் ஆதரவு இருந்தாலே, அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா தமிழக முதல்வர் ஆவதை தடுத்து விட முடியும் என்ற செய்தி வெளியாகியுள்ளது.


 

 
ஓ.பி.எஸ் மற்றும் சசிகலா ஆகியோருக்கு ஏற்பட்டுள்ள மோதல்தான் தற்போது தமிழக அரசியல் சூழ்நிலையை பரபரப்பாக வைத்துள்ளது. அதிமுக எம்.எல்.ஏக்கள் அனைவரின் ஆதரவும் தங்களுக்கு இருப்பதாக சசிகலா தரப்பு கூறி வந்தது. ஆனால், அதிலிருந்து 5 பேர் ஏற்கனவே ஓ.பி.எஸ் பக்கம் வந்துவிட்டனர்.  
 
சட்டமன்றத்தில் தன்னுடைய பலத்தை நிரூப்பேன் என ஓ.பி.எஸ் கூறியுள்ளார். எனவே, சசிகலா தலைமையில் அதிருப்தியில் உள்ள பெரும்பாலான எம்.எல்.ஏக்கள் தன் பக்கம் வருவார்கள் என்பது ஓ.பி.எஸ்-ஸின் நம்பிக்கை..
 
தமிழக மொத்த சட்டமன்ற தொகுதி 234. அதில், கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெற்ற தொகுதி 135.  அதில் ஜெயலலிதா மரணத்தை தொடர்ந்து 134 அதிமுக எம்.எல்.ஏக்கள் உள்ளனர். அதேபோல், திமுக வசம் 89 எம்.எல்.ஏக்கள், காங்கிரஸ் 7, மற்ற கட்சிகள் 4 என மொத்தம் 234 எம்.எல்.ஏக்கள் உள்ளனர்.
 
தற்போது சசிகலா வசம் உள்ள எம்.எல்.ஏக்கள் 129. ஏனெனில் அதிலிருந்து 5 பேர் ஓ.பி.எஸ் வசம் சென்று விட்டனர்.
 
இதில், அதிமுகவிலிருந்து வந்த 5 எம்.எல்.ஏக்களோடு, அவரையும் சேர்த்தால் ஒ.பி.எஸ் வசம் 6 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். 
 
ஒரு கட்சி அமைக்க, சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க 117 எம்.எல்.ஏக்கள் தேவை.. எனவே, இன்னும் 13 அதிமுக எம்.எல்.ஏக்கள், ஓ.பி.எஸ்-ற்கு ஆதரவு கொடுத்து விட்டால், சசிகலா வசம் 116 எம்.எல்.ஏக்கள் மட்டுமே இருப்பார்கள்... அவரால் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாது. ஆட்சியும் அமைக்க முடியாது. 
 
தற்போதைய செய்தி : இதை உணர்ந்துள்ள சசிகலா தரப்பு, காங்கிரஸ் எம்.எல்.ஏக்களின் ஆதரவை பெறுவதற்காக, காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசரிடம் பேரம் பேசப்பட்டதாகவும், அதன் விளைவாக, அவர்கள் சசிகலாவிற்கு ஆதரவு கொடுக்க முன் வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
 
அரசியல் பேரங்களில் பரபரத்துக் கொண்டிருக்கிறது தமிழக அரசியல்...