வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Updated : புதன், 6 ஏப்ரல் 2016 (09:02 IST)

ஆம்னி பேருந்துகளுக்கான நுழைவு வரி: தமிழக அரசின் சட்டத்திருத்தம் செல்லாது என நீதிமன்றம் உத்தரவு

தனியார் ஆம்னி பேருந்துகளுக்கு நுழைவு வரியை விதித்து தமிழக அரசு கொண்டு வந்த சட்டத்திருத்தம் செல்லாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


 

 
சென்னை உயர் நீதிமன்றத்தில், ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் உள்ளிட்ட பல சங்கங்கள் வழக்கு தொடர்ந்தன.
 
இது குறித்து தாக்கல் செய்யப்பட்ட மனுவில், "மோட்டார் வாகன வரிவிதிப்புச் சட்டத்தில் தமிழக அரசு சட்டதிருத்தம் கொண்டு வந்தது.
 
அதன்படி, வெளிமாநிலத்தில் இருந்து தமிழகத்துக்குள் நுழையும் ஆம்னி பேருந்துகள் உள்ளிட்ட ஒப்பந்த வாகனங்களில் ஒரு இருக்கைக்கு என்ற வீதத்தில் வரி நிர்ணயம் செய்து, நுழைவு கட்டணமாக தமிழக அரசு வசூலிக்கிறது.
 
இதனால், எங்களை போன்ற வாகன உரிமையாளர்களுக்கு மட்டுமல்லாமல், பொதுமக்களுக்கும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த புதிய வரி விதிப்பை ரத்து செய்யவேண்டும்" என்று கூறப்பட்டிருந்தது.
 
இந்த வழக்கு நீதிபதிகள் வி.ராமசுப்ரமணியன், என்.கிருபாகரன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
 
அப்போது, அரசு தரப்பில் தாக்கல் செய்த மனுவில், "பழைய வரி விதிப்பு முறையை ஆம்னி பேருந்துகளின் உரிமையாளர்கள் தவறாக பயன்படுத்தி, மோசடி செய்கின்றனர்.
 
அதை தடுக்கவே இந்த புதிய சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது" என்று கூறப்பட்டு இருந்தது.
 
இந்நிலையில், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், "மோசடியைத் தடுக்க கடுமையான விதிமுறைகளைக் கொண்டுவரவேண்டுமே தவிர அதற்காக கூடுதல் வரிவிதிப்பது என்பது தவறு என உச்சநீதிமன்றமே பல தீர்ப்புகளில் கூறியுள்ளது.
 
எனவே, தமிழக அரசின் வரி விதிப்பு சட்டத்திருத்தம், அரசியமைப்பு சட்டத்துக்கு எதிரானது என்று கூறி, அந்த சட்டத்திருத்தத்தை செல்லாது என்று அறிவிக்கின்றோம். என்று உத்தரவிட்டனர்.