1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Updated : வெள்ளி, 3 அக்டோபர் 2014 (20:46 IST)

ஜெயலலிதாவுக்கு வி.ஐ.பி சிகிச்சை அளிக்கப்படவில்லை: கர்நாடக சிறைத்துறை டிஐஜி தகவல்

பெங்களூரு சிறையில் உள்ள ஜெயலலிதாவுக்கு வி.ஐ.பி சிகிச்சை அளிக்கப்படவில்லை என்று கர்நாடக சிறைத்துறை டி.ஐ.ஜி தெரிவித்துள்ளார்.
 
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள  அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா, பரப்பன அக்ரஹாராவில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 7வது நாளாக சிறையில் உள்ள ஜெயலலிதாவுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.
 
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சிறைத்துறை டிஐஜி ஜெய்சிம்ஹா, "ஜெயலலிதாவுக்கு வி.ஐ.பி. சிகிச்சை எதுவும் அளிக்கப்படவில்லை. பரப்பன அக்ரஹாரா சிறையில் மற்ற சாதாரண கைதிகள் எப்படி நடத்தப்படுகின்றனரோ அதைப்போலவேதான் ஜெயலலிதாவும் நடத்தப்படுகிறார்.
 
சிறையில் ஜெயலலிதா சிறைத்துறை அதிகாரிகளிடம் மிகவும் அமைதியாகவே நடந்து கொண்டார். டாக்டர்களின் பரிந்துரைப்படி இரும்பு கட்டிலை தவிர வேறெந்த வசதியையும் அவர் வேண்டும் என்றும் கேட்கவில்லை. சாதாரண கைதிகளுக்கு கூட தொலைக்காட்சி பெட்டி வசதி வழங்கப்பட்டு வரும் நிலையில் அதைக்கூட ஜெயலலிதா கேட்கவில்லை.
 
சிறையில் அவருக்கு டாக்டர்கள் பரிந்துரைப்படி பிரவுண் பிரெட், பால், பிஸ்கட்டுகள், பழங்கள் மற்றும் சப்பாத்திகளே வழங்கப்பட்டு வருகிறது. அதுவும் அவர் விருப்பத்தின் பேரில் மட்டுமே. இதுதவிர படிப்பதற்கு பத்திரிகைகளும் தரப்படுகின்றன. ஜெயலலிதா நல்ல உடல்நலத்துடன் உள்ளார்" என தெரிவித்தார்.