கரூர் சம்பவத்தை தொடர்ந்து மறு அறிவிப்பு வரும் வரை வேறு எந்த நிகழ்ச்சி ஏற்பாடும் செய்ய வேண்டாம் என தவெக தலைமை அறிவுறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கடந்த சனிக்கிழமை கரூரில் தமிழக வெற்றிக் கழகம் நடத்திய பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து அடுத்தடுத்த வாரம் தவெக திட்டமிட்டிருந்த பிரச்சார கூட்டங்கள் நிறுத்தப்படலாம் என பேசிக் கொள்ளப்பட்டது.
இந்நிலையில் வரும் வாரங்களில் விஜய்யின் பிரச்சார கூட்டங்களுக்கு அனுமதி கேட்க வேண்டாம். வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் எந்த முன்னேற்பாடுகளும் செய்ய வேண்டாம் என நிர்வாகிகளுக்கு தலைமை அறிவுறுத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
மேலும் கட்சியிலிருந்து மறு அறிவிப்பு வரும் வரை வேறு எந்த நிகழ்ச்சிகளும் நடத்தக்கூடாது என கூறப்பட்டுள்ளதாம். நாளை மறுநாள் காந்தி ஜெயந்தியன்று தவெகவினர் காந்தி சிலைகளுக்கு மாலை அணிவிக்க இருந்த நிலையில் அந்த ஏற்பாடுகளும் நிறுத்தப்பட்டுள்ளதா என்பது குறித்து தெரியவில்லை. எனினும் இந்த பிரச்சார பயண ஒத்திவைப்பு தகவல் தவெகவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Edit by Prasanth.K