வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Updated : வெள்ளி, 3 அக்டோபர் 2014 (20:44 IST)

என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டம் நீடிப்பு: மறியல் செய்த 500 பேர் கைது

நெய்வேலி என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்கள் கடந்த மாதம் 3 ஆம் தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். பணி நிரந்தரம், கூடுதல் சம்பளம் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி 30–வது நாளாக இன்று வேலைக்கு செல்லவில்லை.
 
இதனால் என்.எல்.சி. சுரங்கங்களில் நிலக்கரி வெட்டியெடுக்கும் பணி மற்றும் மின் உற்பத்தி ஆகியவற்றில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பிரச்சனைக்கு தீர்வு காண பலமுறை பேச்சுவார்த்தை நடத்தும் சுமூக முடிவு ஏற்படவில்லை.
 
எனவே ஒப்பந்த தொழிலாளர்கள் பல்வேறு போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர். என்.எல்.சி. 2–வது சுரங்கம் முன்பு குடும்பத்தினருடன் சேர்ந்து மறியல் நடத்த முடிவு செய்தனர்.
 
அதன்படி இன்று (3 ஆம் தேதி) காலையில் மந்தாரக்குப்பம் பேருந்து நிலையம் அருகே சுமார் 5 ஆயிரம் பேர் திரண்டனர். இதனால் அப்பகுதியிலும், என்.எல்.சி. 2–வது சுரங்கம் முன்பும் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்தனர்.
 
கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டவாறே ஒப்பந்த தொழிலாளர்களின் பேரணி என்.எல்.சி. 2–வது சுரங்கம் நோக்கி புறப்பட்டது. ஊர்வலத்துக்கு ஒப்பந்த தொழிலாளர்கள் தொழிற்சங்க கூட்டமைப்பு சிறப்பு தலைவர் திருமாவளவன் தலைமை தாங்கினார். இதில் தொ.மு.ச. நிர்வாகிகள் ஸ்டாலின் ஹென்றி, பழனிவேல், தமிழக வாழ்வுரிமை கட்சியை சேர்ந்த அன்பழகன், தேவராஜன் உள்ளிட்ட பல்வேறு சங்கங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.
 
என்.எல்.சி. 2–வது சுரங்கத்துக்கு சுமார் 100 அடி முன்பு போலீசார் இரும்பு தடுப்பு அமைத்து பேரணியை தடுத்து நிறுத்தினர். மறியல் போராட்டத்துக்கு அனுமதி மறுத்தனர். ஆனால் அதனையும் மீறி அதே இடத்தில் ஆர்ப்பாட்டம் செய்த சுமார் 500 பேரை போலீசார் கைது செய்தனர். கைதானவர்களை பேருந்துகளில் ஏற்றி கொண்டு சென்றனர்.