வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Modified: திங்கள், 4 ஜனவரி 2016 (03:48 IST)

அடுத்த முதல்வர் அன்புமணி தான் - ராமதாஸ்

தமிழகத்தின் ஆட்சிப் பொறுப்பில் இருந்து அதிமுகவும், திமுகவும் அகற்றப்பட வேண்டும் என்று பாகம பாடுபட்டு வருகிறதோ, அந்தக் காரணங்களை வலுப்படுத்தும் வகையில் தான் அண்மைக்கால நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.
 

 
விழுப்புரம், பூத்தமேட்டில் ஞாயிற்றுக்கிழமை பாமக சார்பில் 8ஆவது கிழக்கு மண்டல மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி எம்.பி. ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
 
இந்த மாநாட்டில் பாமக நிறுவனர் ராமதாஸ் பேசுகையில், நாம் விடுதலை அடைந்த நாளில் இருந்து 20 ஆண்டுகளில் கல்வித் துறையிலும், சுகாதாரத் துறையிலும், வேளாண் துறையிலும் திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டுள்ளோம். கல்வியும், சுகாதாரமும் தனியாரின் கைகளுக்கு போய்விட்டன. ஒரு மனிதன் வாழ்க்கை முழுவதும் ஈட்டும் ஊதியத்தின் பெரும்பகுதியை கல்விக்காகவும், மருத்துவச் செலவுகளுக்காகவுமே செலவிட வேண்டியிருக்கிறது.
 
இன்னொருபுறம் விவசாயம் லாபம் கொடுக்கும் தொழிலாக இருந்த நிலை மாறி, விவசாயிகளை கடன் வலையில் சிக்க வைத்து தற்கொலைக்கு தூண்டும் கருவியாக மாறிவிட்டது. இவை தவிர சமூகம், பொருளாதாரம், கலாச்சாரம், வேலைவாய்ப்பு, தொழில் உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் தமிழகம் கண்டது சீரழிவைத் தவிர வேறொன்றுமில்லை.
 
இந்த சீரழிவுகளில் இருந்து மீட்கப்படாவிட்டால் தமிழகத்தை ஆண்டவனை விட பெரிய சக்தியால் கூட காப்பாற்ற முடியாது என்பது தான் உண்மை. தமிழக நலன் காக்கவே, கடந்த பிப்ரவரி மாதம் 15 ஆம் தேதி சேலத்தில் நடைபெற்ற பாமக பொதுக்குழு கூட்டத்தில் பாமக முதலமைச்சர் வேட்பாளராக டாக்டர் அன்புமணி ராமதாசை முன்னிறுத்துவது என முடிவு செய்யப்பட்டு அன்று மாலை நடந்த மாநாட்டில் அறிவிக்கப்பட்டது.
 
எந்தெந்த காரணங்களுக்காக தமிழகத்தின் ஆட்சிப் பொறுப்பில் இருந்து அதிமுகவும், திமுகவும் அகற்றப்பட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி பாடுபட்டு வருகிறதோ, அந்தக் காரணங்களை வலுப்படுத்தும் வகையில் தான் அண்மைக்கால நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.
 
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் மிகவும் விரைவாக நிகழ்த்தப்பட வேண்டும். அதற்காக நம்மை ஆயத்தப்படுத்திக் கொள்ளும் வகையில்தான் பாட்டாளி மக்கள் கட்சியின் எட்டாவது மண்டல மாநாடு. இதுவரை நடந்த 7 மாநாடுகளும் மிகச்சிறப்பாக நடைபெற்றுள்ளன. அவற்றை விஞ்சும் வகையில் இந்த மாநாடு அமைந்துள்ளது என்றார்.
 
இந்த மாநாட்டில், பாமக தலைவர் ஜி.கே. மணி, வன்னியர் சங்க தலைவர் குரு, பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன், இணை பொதுச்செயலாளர் இசக்கி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இந்த மாநாட்டிற்காக சுமார், 26 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டு இருந்துத குறிப்பிடதக்கது.