வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Updated : செவ்வாய், 21 ஜூலை 2015 (16:01 IST)

புதிய விடியலுக்கான சூழல் தமிழகத்திலே ஏற்பட்டிருக்கிறது: ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

புதிய விடியலுக்கான சூழல் இன்றைக்கு தமிழகத்திலே ஏற்பட்டிருக்கிறது என்று காங்கிரஸின் தமிழகத் தலைவர்  ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறியுள்ளார்.
 
இது குறித்து இளங்கோவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
 
தமிழகத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்று ஒன்பதரை ஆண்டுகாலம் பொற்கால ஆட்சி நடத்திய பெருந்தலைவர் காமராஜரின் 113 ஆவது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு திருச்சி ஜி.கார்னர் மைதானத்தில் 23.7.2015 அன்று மாலை 3 மணியளவில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.
 
இந்தக் கூட்டத்தில் இந்தியாவின் எதிர்கால நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கிக்கொண்டிருக்கிற இளந்தலைவர் ராகுல் காந்தி சிறப்பு பேரூரை ஆற்றவிருக்கிறார்.
 
பொதுக்கூட்ட நிகழ்வுக்கு பிறகு தமிழகத்தில் உள்ள காவிரி டெல்டா விவசாய சங்கப் பிரதிநிதிகள், கரும்பு, ரப்பர், தேயிலை, தென்னை மற்றும் பல்வேறு விவசாய சங்க பிரதிநிதிகளை சிறு சிறு குழுக்களாக சந்தித்து கலந்துரையாடி பிரச்சனைகளின் உண்மை தன்மையை அறிய இருக்கிறார்.
 
தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சியில் இல்லாமல் 48 ஆண்டுகள் உருண்டோடி விட்டன. தேசிய நலனுக்காக சிலவற்றை விட்டுக்கொடுக்க வேண்டிய சூழல் நீண்டகாலமாக ஏற்பட்டு வந்தது. 
 
ஆனால், இன்றைக்கு தமிழகத்திலே மீண்டும் காமராஜர் ஆட்சியை அமைக்க வேண்டும் என்கிற செயல்திட்டத்திற்கு வடிவம் கொடுக்கிற வகையில் திருச்சியிலே காங்கிரஸ் கட்சியினர் ஆயிரக்கணக்கில் அலைகடலென திரண்டுவர இருக்கிறார்கள்.
 
திருச்சியே திணறியது என்று அனைவரும் கூறுகிற வகையில் காங்கிரஸ் தோழர்கள் கூட இருக்கிறார்கள். கடந்த சில மாதங்களாக தமிழக காங்கிரசில் ஏற்பட்டுள்ள எழுச்சியின் முழுவடிவத்தை திருச்சி காண இருக்கிறது.
 
மீண்டும் காமராஜர் ஆட்சி என்று நாம் கூறுவது அந்த ஆட்சியில் கல்வி, சமூகநீதி, அடிப்படை வளர்ச்சியை நோக்கமாக கொண்டு நிகழ்த்தப்பட்ட சாதனைகளைப் போல மீண்டும் நிகழ்த்த வேண்டும் என்பதுதான் எங்களது நோக்கம்.
 
நேர்மை, எளிமை, தூய்மை, வெளிப்படைத்தன்மை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டதுதான் காமராஜர் ஆட்சி. காமராஜர் ஆட்சி என்கிற லட்சியத்தை அடைவதன் மூலமாக கடந்த 50 ஆண்டுகளாக தமிழக காங்கிரஸ் கட்சியினரிடையே இருந்து வந்த ஏக்கத்திற்கு வடிகாலாக 2016 சட்டமன்றத் தேர்தல் அமையவிருக்கிறது.
 
தமிழக, காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை நமது ஒரே லட்சியம் காமராஜர் ஆட்சி அமைப்பதுதான். அத்தகைய நிலையில் மற்ற கட்சிகளோடு கூட்டணி அமைக்க வேண்டிய நிலை ஏற்பட்டால், அது ஆட்சியில் பங்கு; அதிகாரத்தில் பங்கு என்ற அடிப்படையில்தான் இருக்கும் என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறோம்.
 
ஒன்று ஆளுங்கட்சியாக இருப்போம். இல்லையெனில் எதிர்கட்சியாக இருப்போம். இரண்டிற்கும் மாறாக தோழமை கட்சி என்கிற சகாப்தம் முடிந்துவிட்டது.
 
கடந்த 25 ஆண்டுகளாக நடைபெற்ற ஒவ்வொரு தேர்தல்கள் மூலமாக தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. அதேபோல, 2016 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு தமிழகத்திலே நடைபெற்று வருகிற மக்கள் விரோத ஊழல் ஆட்சி தூக்கி எறியப்பட்டு, மக்கள் நலன்சார்ந்த ஆட்சி அமைய இருக்கிறது.
 
அத்தகைய ஆட்சியை அமைப்பதிட காங்கிரஸ் கட்சியினர் தங்களை அர்ப்பணித்துக்கொள்ள வேண்டும். அந்த அர்ப்பணிப்பு உணர்வை உலகுக்கு உணர்த்த திருச்சியில் கூட வேண்டியது ஒவ்வொரு காங்கிரஸ் தோழருடைய தலையாய கடமையாகும். "சுடுதலும், குளிரும் உயிர்க்கில்லை, சோர்வு, வீழ்ச்சிகள் தொண்டருக்கில்லை" என்பதற்கொப்ப காங்கிரஸ் செயல்வீரர்கள் திருச்சியை நோக்கி அணி அணியாக, அலை அலையாக அணிதிரண்டு வர அன்போடு அழைக்கிறேன்.
 
"இன்றெமை வருத்தும் இன்னல்கள் மாய்க! நன்மைவந்தெய்துக! தீதெலாம் நலிக" என்கிற தேசியக்கவி பாரதியின் வரிகளுக்கேற்ப புதிய விடியலுக்கான சூழல் இன்றைக்கு தமிழகத்திலே ஏற்பட்டிருக்கிறது.
 
இளந்தலைவர் ராகுல் காந்தி பங்கேற்கிற திருச்சி கூட்டம் மிகப்பெரிய அரசியல் திருப்பத்தை தமிழகத்திலே ஏற்படுத்த இருக்கிறது.
 
இதன்மூலம் தமிழக தேசிய சக்திகளிடையே மிகப்பெரிய மறுமலர்ச்சி ஏற்படப்போவது உறுதி. அத்தகைய சூழலை உருவாக்க திருச்சி நோக்கி அணி திரண்டு வருகை புரியும் உங்களை இருகரம் கூப்பி வரவேற்க காத்திருக்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் இளங்கோவன் கூறியுள்ளார்.