வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: திங்கள், 29 மே 2017 (11:57 IST)

சென்னையை மிரட்டுமா புதிய புயல் ‘மோரா’ : வானிலை மையம் என்ன சொல்கிறது?

சென்னையை மிரட்டுமா புதிய புயல் ‘மோரா’ : வானிலை மையம் என்ன சொல்கிறது?

வங்கக்கடலில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக தீவிரமடைந்ததால் தமிழகம் மற்றும் புதுச்சேரி துறைமுகங்களில் 2-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இந்த புதிய புயலுக்கு மோரா என பெயரிடப்பட்டுள்ளது.


 
 
வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 6 மணிநேரத்தில் மணிக்கு 12 கி.மீ வேகத்தில் தீவிரமடைந்து புயலாக மாறியுள்ளது. 'மோரா' என பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் வங்கக்கடலில் 720 கி.மீ. தொலைவில் மேற்குவங்கத்துக்கு தென்கிழக்கே மையம் கொண்டுள்ளது.
 
அடுத்த 24 மணி நேரத்தில் மோரா புயல் வலுவடைந்து வங்கதேசம் அருகே கரையை கடக்கும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது. இந்த புயல் காரணமாக ஒடிசா, ஆந்திர மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. ஆனாலும் இந்த மோரா புயலால் தமிழகத்தின் தட்பவெப்ப நிலையில் இந்த மாற்றமும் ஏற்பட வாய்ப்பில்லை என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் இந்த மோரா புயல் அதே இடத்தில் நீடித்தால் 2015-இல் ஏற்பட்டது போல தமிழகத்தில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
 
மோரா புயல் காரணமாக அடுத்த 48 மணி நேரத்துக்கு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாளை முதல் தென்மேற்கு பருவமழை தொடங்கவிருக்கும் நிலையில் இந்த புயல் சின்னம் உருவாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.