வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Updated : வியாழன், 13 ஜூலை 2017 (10:01 IST)

சிறை விதியை வளைக்க லஞ்சம்: சசிகலா மீது பாயுமா புதிய வழக்குகள்!

சிறை விதியை வளைக்க லஞ்சம்: சசிகலா மீது பாயுமா புதிய வழக்குகள்!

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் சசிகலாவுக்கு பெங்களூர் சிறையில் சிறப்பு சலுகைகள் வழங்க 2 கோடி ரூபாய் லஞ்சம் வழங்கப்பட்டுள்ளதாக ஐபிஎஸ் அதிகாரி தாக்கல் செய்த அறிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 
 
அதிமுக தற்காலிக பொதுச்செயலாளர் சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் 4 வருடம் சிறை தண்டனை பெற்று பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சசிகலா சிறையில் அடைக்கப்பட்ட நாளில் இருந்து அவர் சிறை விதிமுறைகளை மீறி அளவுக்கு அதிகமான நபர்களை சிறையில் சந்தித்து வருவதாக செய்திகள் வெளியாயின.
 
இந்நிலையில் சிறைத்துறை டிஐஜியான ரூபா, கர்நாடக டிஜிபி ஆர்.கே.தத்தாவுக்கு, சிறைத்துறை டிஜிபி ஹெச்.எஸ்.சத்யநாராயண ராவ் மற்றும் சிறை அதிகாரிகள் மீது குற்றம்சாட்டி ஒரு அறிக்கை ஒன்றை எழுதி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
 
நான்கு பக்கத்திலான அந்த அறிக்கையில் சசிகலா சிறையில் அடைக்கப்பட்ட நாள் முதல் அவர் விதிமுறைகளை வளைத்து அதிகமான நபர்களை சிறையில் சந்தித்து வருகிறார். இது தொடர்பான செய்தி வெளியானதும் அதில் கொஞ்சம் கெடுபிடி காட்டுவதை போல வெளியில் காட்டிக்கொண்டனர். ஆனால் உள்ளுக்குள் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
 
சிறை விதிகளை சசிகலாவுக்காக வளைக்க சிறை அதிகாரிகளுக்கு 2 கோடி ரூபாய் வரை லஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை கர்நாடகாவை சேர்ந்த சசிகலா விசுவாசி ஒருவர்தான் ஏற்பாடு செய்து கொடுத்ததாக கூறப்படுகிறது.
 
சசிகலா தரப்பில் இருந்து பணத்தை பெற்று, அதிகாரிகளுக்கு வினியோகம் செய்து அவர்களை சரிகட்டும் வேலையில் அந்த நபர் ஈடுபட்டுள்ளார். இந்த விவகாரத்தை தமிழக எதிர்க்கட்சிகள் கையில் எடுத்தால் சசிகலா மீது சிறை விதிகளை வளைத்தது, அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்தது உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் வழக்கு தொடர கர்நாடக அரசுக்கு நெருக்கடி ஏற்படும். இதனால் சிறை விதிகளை வளைத்ததற்காக சசிகலா மீது கூடுதலாகக வழக்கு தொடரப்படுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.