வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: வியாழன், 30 ஏப்ரல் 2015 (19:03 IST)

"குடிநீர் கிடைக்காமல் தத்தளித்தோம்": நேபாள நிலநடுக்கத்தில் தப்பிய தமிழர்கள் உருக்கம்!

உணவு, குடிநீர் கூட கிடைக்காமல் தத்தளித்தோம் என நேபாள நிலநடுக்கத்தில் தப்பிய தமிழர்கள் உருக்கமாக தெரிவித்துள்ளனர்.
 

 
நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கிய இந்திய சுற்றுலா பயணிகளை மீட்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டது. அதன் முயற்சியாக பல கட்டங்களாக நேபாளத்தில் மாட்டிக் கொண்டு தவிக்கும் இந்தியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு தலைநகர் டெல்லி கொண்டுவரப்பட்டனர்.
 
தமிழகத்திலிருந்து சுற்றுலா சென்ற 80க்கும் மேற்பட்டோர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பி சொந்த ஊர் திரும்பி வருகின்றனர். இவர்களில் ஏற்கனவே 35 பேர் விமானம் மூலம் சென்னை வந்துவிட்டனர். மேலும் 42 பேர் நேற்றிரவு ரயில் மூலம் சென்னை சென்ட்ரல் வந்தடைந்தனர். இவர்களை வரவேற்பதற்காக தமிழக அரசு சார்பில் புரசைவாக்கம் மற்றும் பெரம்பூர் தாசில்தார்களும், நான்கு ஆர்ஐக்களும் சென்ட்ரல் ரயில் நிலையம் சென்றிருந்தனர்.
 
உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரிலிருந்து ரப்தி சாகர் எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தனர். ரயில் இன்று அதிகாலை சரியாக 2.40 மணியளவில் சென்னை வந்தது. 42 பேரில் 11 பேர் அதே ரயிலில் ஈரோடு மற்றும் கோவைக்கு சென்றுவிட்டனர்.
 
மீதமுள்ள 31 பேரும் சென்னையில் உள்ள பல்வேறு இடங்களை சேர்ந்தவர்கள். அவர்களை அழைத்து செல்ல தமிழக அரசு இரண்டு மினி பஸ்கள் ஏற்பாடு செய்திருந்தது. அவர்கள் சேப்பாக்கத்தில் உள்ள விருந்தினர் மாளிகையில் தங்க வைக்கப்பட்டு பின்னர் காலையில் அவரவர் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதுதவிர மற்றொரு குழுவாக சுற்றுலா சென்ற 20க்கும் மேற்பட்ட தமிழர்கள் இன்று சென்னை வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நேற்றிரவு ரயிலில் வந்தவர்கள் அனைவரும் தனியார் டிராவல்ஸ் மூலம் கடந்த 22ஆம் தேதி சென்னையிலிருந்து நேபாளத்துக்கு ஆன்மிக சுற்றுலா சென்றுள்ளனர்.
 
இதுகுறித்து சென்னை முகப்பேரை சேர்ந்த ரமணி (65) கூறியதாவது:-
 
நானும் என் மனைவி காஞ்சனாவும் கோயில் வழிபாடு மீதுள்ள ஆர்வத்தால் மயிலாப்பூரில் உள்ள ஒரு தனியார் டிராவல்ஸ் மூலம் நேபாளத்துக்கு சுற்றுலா சென்றோம். ஆனால் அங்கு இதுபோன்ற ஒரு கொடிய சம்பவம் நடக்கும் என்று கனவில் கூட நினைத்து பார்க்கவில்லை.
 
நாங்கள் அங்கு ஒருசில இடத்தை சுற்றிபார்த்துவிட்டு அங்குள்ள முக்திநாத் அருகே உள்ள ஜோம்சம் என்ற இடத்தில் லாட்ஜ் எடுத்து தங்கியிருந்தோம். அப்போது திடீரென நில அதிர்வு ஏற்படும் உணர்வு ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த நாங்கள் அனைவரும் அவசர, அவசரமாக வெளியே ஓடிவந்தோம். அப்போது லாட்ஜுக்கு பின்னால் இருந்து பெரிய மலை ஒன்று அப்படியே சரிந்து விழுந்தது.
 
மேலும் லாட்ஜ் மற்றும் அங்குள்ள கட்டிடங்கள் நில அதிர்வால் ஆடியது. இரண்டு நாளாக சரியான சாப்பாடு கிடைக்காமல் தவித்து வந்தோம். ஒரே ஒரு ரொட்டி மட்டுமே உணவாக தரப்பட்டது. மிகப்பெரிய இந்த நிலநடுக்கத்தில் இருந்து மீண்டுவந்தது மகிழ்ச்சியளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
 
கோவையை சேர்ந்த சதாசிவன் (65) கூறுகையில், ‘குடிக்க தண்ணீர் மற்றும் சாப்பாடு கிடைக்காமல் மிகவும் அவதிப்பட்டோம். ஒரே ஒரு ரொட்டி மட்டுமே உணவாக வழங்கப்பட்டது. பூகம்பத்தை கண் முன்னால் பார்த்ததில் இருந்து மனதில் ஏதோ ஒருவித பதற்றம் நிலவுகிறது’ என்றார்.