Tvk Meeting: தமிழ்நாட்ல இருந்த யாரும் வராதீங்க!.. என்.ஆனந்த் கோரிக்கை!..
கடந்த 5ம் தேதியே சேலத்தில் மக்களை சந்திக்க தவெக தலைவர் விஜய் திட்டமிட்டார். ஆனால் அனுமதி கிடைக்கவில்லை. எனவே அதே தேதியில் புதுச்சேரியில் மக்களை சந்திப்பதோடு ரோட் ஷோ நடத்தவும் தவெக தரப்பில் திட்டமிடப்பட்டது. ஆனால் புதுச்சேரி போலீசார் அதை அனுமதிக்கவில்லை. அதேநேரம் பொதுக்கூட்டத்திற்கு அனுமதி கொடுக்கப்பட்டது. அதன்படி 9ம் தேதியான நாளை புதுச்சேரி உப்பளத்தில் பொதுக்கூட்டம் நடைபெறவிருக்கிறது. இதில் விஜய் கலந்துகொண்டு பேசுகிறார்.
அதேநேரம் இதில் QR Code அனுமதியுடன் 5000 பேர் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட பல கட்டுப்பாடுகளை புதுச்சேரி காவல்துறை விதித்திருக்கிறது. இந்நிலையில்தான் தவெக பொதுச் செயலாளர் என் ஆனந்த் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
அதில் புதுச்சேரியில் நடைபெறவிருக்கும் பொதுக்கூட்டத்திற்கு 5000 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். எனவே புதுச்சேரியை ஒட்டியுள்ள தமிழத்தை சேர்ந்த யாருக்கும் அனுமதி இல்லை. எனவே தொண்டர்களும், பொதுமக்களும் இதற்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.
கர்ப்பிணி பெண்கள், கை குழந்தையுடன் இருக்கும் சகோதரிகள், முதியவர்கள், உடல்நலம் பாதிக்கபட்டவர்கள், பள்ளி சிறுவர், சிறுமிகள் மாற்றுத்திறனாளிகள் யாருக்கும் அனுமதி இல்லை. அவர்கள் வீட்டில் இருந்தபடியே தொலைக்காட்சியில் நேரலையில் கண்டு மகிழுமாறு கேட்டுக் கொள்கிறோம். நம் தலைவர் வரும்போதும், செல்லும்போதும் அவரின் வாகனத்திற்கு முன்போ பின்போ பின் தொடர்ந்து போக்குவரத்துக்கு இடையூறு செய்ய வேண்டாம்.
காவல்துறை காவல்துறையின் வழிகாட்டு நெறிமுறைப்படி நடந்து கொள்ள வேண்டும். போக்குவரத்து விதிகளை முழுவதுமாக பின்பற்ற வேண்டும். வாகனம் நிறுத்த எந்த இடம் ஒதுக்கப்பட்டிருக்கிறதோ அங்கே வண்டிகளை நிறுத்த வேண்டும். பொதுக்கூட்டம் முடிந்தவுடன் அனைவரும் அமைதியான முறையில் கலைந்து செல்ல வேண்டும் என அவர் கோரிக்கை வைத்திருக்கிறார்.