வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Updated : செவ்வாய், 8 செப்டம்பர் 2015 (23:16 IST)

துப்பாக்கி கலாச்சாரத்தை கட்டுப்படுத்த ராமதாஸ் கோரிக்கை

தமிழகத்தில் துப்பாக்கி கலாச்சாரத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
 

 
இது குறித்து, பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
 
சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் காமேஷ் என்பவர் அவருடன் பயணம் செய்த போக்கிலி ஒருவரால் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். இதற்காக போக்கிலி பயன்படுத்தியது கள்ளத் துப்பாக்கி என்று விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.
 
சென்னை உட்பட தமிழகம் முழுவதும் பரவி வரும் துப்பாக்கி கலாச்சாரம் பற்றிய தகவல்கள் மிகவும் அதிர்ச்சியளிப்பவையாக உள்ளன. சென்னையில் மட்டும் 5,000 பேரிடம் கள்ளத் துப்பாக்கி இருப்பதாகவும், தமிழகத்தின் மற்ற மாவட்டங்களிலும் கள்ளத்துப்பாக்கிகள் தாராளமாக புழக்கத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
 
ஒரு கள்ளத்துப்பாக்கி ரூ.1500 என்ற விலையில் விற்பனை செய்யப்படுவதாகவும், தென் மாநிலங்களின் சட்டவிரோத கள்ளத்துப்பாக்கி சந்தையாக தமிழகம் உருவெடுத்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
 
பீகார், மேற்குவங்கம் போன்ற மாநிலங்களில் தயாரிக்கப்படும் இத்தகைய துப்பாக்கிகள் அங்கிருந்து பல்வேறு வழிகளில் கடத்தி வரப்பட்டு இங்கு விற்பனை செய்யப்படுகின்றன.
 
தமிழகத்தில் கள்ளத்துப்பாக்கிகள் புழக்கத்தில் இருப்பதோ, இங்கிருந்து தான் பிற மாநிலங்களுக்கு விற்பனை செய்யப்படுகின்றன என்பதோ காவல்துறையினருக்கு தெரியாத உண்மை இல்லை. காவல்துறை அதிகாரிகளுக்கு நன்றாகத் தெரிந்து தான் கள்ளத் துப்பாக்கிகள் விற்பனை செய்யப்படுகின்றன.
 
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சென்னை கோயம்பேடு, கிழக்கு கடற்கரை சாலை போன்ற பகுதிகளில் வட இந்திய மாணவர்கள் சிலர் துப்பாக்கிகளுடன் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டதாக செய்திகள் வெளியான போதே தமிழகத்தில் கள்ளத்துப்பாக்கி கலாச்சாரத்தை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என்று வலியுறுத்தினேன்.
 

தமிழக அரசும், காவல்துறையும் அந்த விஷயத்தில் கவனம் செலுத்தியிருந்தால் இப்போது இந்த நிலை ஏற்பட்டிருக்காது. மாறாக ஆட்சியாளர்கள் அலட்சியம் காட்டியதால் தான் கள்ளத் துப்பாக்கிக் கலாச்சாரத்தை கட்டுப்படுத்துவது மிகவும் கடினம் என்ற நிலைமை இப்போது ஏற்பட்டிருக்கிறது.
 
துப்பாக்கி கலாச்சாரத்திறகு உடனடியாக முடிவு கட்டாவிட்டால், சிறிய குற்றங்களுக்கு கூட கள்ளத் துப்பாக்கியை பயன்படுத்தும் நிலை உருவாகிவிடும். அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் மனித உயிர்களுக்கு பாதுகாப்பே இல்லை என்ற நிலை ஏற்பட்டுவிடும். நூறு ரூபாய்க்காகக் கூட ஒருவரை சுட்டுக் கொல்லும் அவலம் உருவாகிவிடும்.
 
அமெரிக்காவில் துப்பாக்கிகள் கட்டுப்பாடின்றி பயன்படுத்த அனுமதிக்கப்பட்டதன் விளைவு தான் அங்கு அடிக்கடி பள்ளிக்கூடத்தில் புகுந்தும், தொலைக்காட்சி நிலையத்திற்குள் புகுந்தும் அப்பாவிகளை மர்ம நபர்கள் சுட்டுக் கொல்லும் கொடூரங்கள் அரங்கேறுகின்றன. கள்ளத் துப்பாக்கிக் கலாச்சாரத்திற்கு உடனடியாக முடிவு கட்டப்படாவிட்டால் தமிழகத்திலும் அதேபோன்ற துப்பாக்கிச்சூட்டு கொலைகள் நடக்கும் நிலை ஏற்படுவதற்கு அதிக காலங்கள் ஆகாது. தமிழகத்தில் ஏற்கனவே சட்டம் - ஒழுங்கு மிகவும் மோசமடைந்திருக்கிறது.
 
கடந்த இரு நாட்களில் மட்டும் பார்த்தால், வேலூரில் ஒரு போக்கிலி அதிமுகவின் முன்னாள் மாவட்ட செயலாளரின் ஆட்களால் கல்லால் அடித்தே படுகொலை செய்யப்பட்டிருக்கிறான்; திண்டுக்கல்லில் வழக்கறிஞர் ஒருவர் குடிப்பகத்தில் வைத்து கொல்லப்பட்டுள்ளார். இதுபோன்ற குற்றங்கள் தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் பெருளவில் நடந்துகொண்டு தான் இருக்கின்றன.
 
தமிழ்நாட்டில் கடந்த நான்கரை ஆண்டுகளில் 9000 படுகொலைகள், 88,500 கொள்ளைகள் உட்பட ஏராளமான குற்றங்கள் நடந்திருக்கின்றன. துப்பாக்கிகள் பெருகினால் நிலைமை மேலும் மோசமாகிவிடும்.
 
எனவே, தமிழகத்தில் கள்ளத் துப்பாக்கிகளை ஒழிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.