கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் நிர்வாண பிணம்: மணலியில் பயங்கரம்

Ilavarasan| Last Modified புதன், 6 ஆகஸ்ட் 2014 (17:52 IST)
சென்னை மணலி அருகே மாத்தூர் எம்எம்டிஏ பகுதியில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில், வெட்டு காயங்களுடன் வாலிபர் சடலம் கிடந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை மணலியை அடுத்த மாத்தூர் எம்எம்டிஏ பகுதியில் கல்யாணசுந்தரம் நகர் பகுதியை சேர்ந்த சிலர் நேற்று அதிகாலை வீட்டிலிருந்து வெளியே வந்தனர். அப்போது சாலையின் ஓரமாக ஒருவர் வெட்டு காயங்களுடன், நிர்வாண நிலையில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்ததை கண்டனர். அவரது கை, கால்கள் கட்டப்பட்டு இருந்தன. காலில் சாக்ஸ் மட்டும் அணிந்திருந்தார். அவரது சட்டையை கிழித்து கை, கால்கள் கட்டப்பட்டு இருந்தது. கொலை செய்யப்பட்டவருக்கு 35 வயது இருக்கும். தகவல் பரவியதும் அப்பகுதி மக்கள் திரண்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தகவலறிந்து மாதவரம் பால்பண்ணை காவல் ஆய்வாளர் சுந்தரம் தலைமையில் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து, சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

கொலை நடந்த இடத்தில் மது பாட்டில்கள் சிதறிக் கிடந்தன. ரத்தக்கறை படிந்துள்ள இடத்தில் கார் டயர் தடம் பதிவாகி உள்ளது. எனவே, கொலை செய்தவர்கள் காரில்தான் வந்திருப்பார்கள் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். இறந்தவர் யார், குடிபோதையில் நண்பர்களிடையே நடந்த சண்டையில் கொலை செய்யப்பட்டாரா, கள்ளக்காதல் விவகாரமா என பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரிக்கின்றனர்.
கல்யாணசுந்தரம் நகர் பகுதியில் பல்வேறு இடங்களில் இருந்து ஏராளமானோர் கார், ஆட்டோ, பைக் போன்ற வாகனங்களில் கூட்டமாக வந்து, மது அருந்துகின்றனர். சில நேரங்களில் அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டு, ஒருவரை ஒருவர் தாக்கி கொள்ளும் சம்பவம் நடக்கிறது. இதுபற்றி காவல்துறையினரிடம் பலமுறை புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், எவ்வித நடவடிக்கையும் இல்லை. ரோந்து பணியில் ஈடுபடுவதும் இல்லை. இந்நிலையில் நேற்று அதிகாலையில் வாலிபர், நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதற்கு காவல்துறையினரின் மெத்தனமே காரணம் என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.


இதில் மேலும் படிக்கவும் :