1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Ilavarasan
Last Updated : வெள்ளி, 27 ஜூன் 2014 (18:01 IST)

சினிமா போல சேசிங் செய்து ரவுடியை கொன்றதாக கைதானவர்கள் வாக்குமூலம்

ஓசூர் அருகே பிரபல ரவுடியை வெட்டிக்கொலை செய்த வழக்கில் 9 பேரை நேற்றிரவு பெங்களூரில் காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் கொலைக்கான காரணம் தெரியவந்துள்ளது.
 
ஓசூர் அரசனட்டியை சேர்ந்தவர் கவாலா என்கிற விஜயகுமார் (40). இவர் மீது கர்நாடகா மாநிலத்தில் 5 கொலை வழக்குகள் உள்பட மொத்தம் 32 வழக்குகள் உள்ளன. கடந்த 24 ஆம் தேதி இவர் பெங்களூருக்கு சென்று விட்டு திரும்பும் வழியில், ஓசூர் சிப்காட் அருகே மர்ம கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.
 
1989 ஆம் ஆண்டு பள்ளி படிப்பை முடித்தது முதல், ரவுடியாக செயல்பட்டு வந்த விஜயகுமார் மீது, கொலை, கொள்ளை, வழிப்பறி, ஆள்கடத்தல், சட்ட விரோதமாக துப்பாக்கி, வெடிபொருட்கள் வைத்திருந்தது என பல்வேறு வழக்குகள் உள்ளன.

பிரபல ரவுடி டெட்லி சோமாவின், வலது கையாக செயல்பட்டு வந்த விஜயகுமார், அவர் காவல்துறை என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட பிறகு, அந்த கும்பலுக்கு தலைவனானார். இந்நிலையில் கடந்த 24 ஆம் தேதி பெங்களூரில் ஒரு ஓட்டலில் ஒன்வே என்ற கன்னட பட ஆடியோ கேசட் வெளியீட்டு விழாவில் பங்கேற்று விட்டு திரும்பி வந்தபோது, அவரது காரை பின்தொடர்ந்து வந்த கும்பல், ஓசூர் சிப்காட்டில் சரமாரியாக வெட்டிக் கொன்றனர். கொலையாளிகளை காவல்துறையினர் தீவிரமாக தேடி வந்தனர்.
 
இந்நிலையில், ரவுடி கொலை தொடர்பாக கர்நாடக மாநிலம் பெங்களூர் சில்க் போர்டு பகுதியில் பதுங்கியிருந்த பெங்களூர் மடிவாளா பகுதியைச் சேர்ந்த பாபு என்ற நாகபாபு (44), ஹராலால் பிரசாத் (38), அருண்குமார் என்ற அருண் (38), சுனில் கவுடா (26), சேத்தன் (22), விஸ்வநாத் (33), முனிராஜ் (31), சதீஷ்ரெட்டி (22) மற்றும் தாவரகரையைச் சேர்ந்த நரேந்திரா என்ற நரே (31) ஆகிய 9 பேரை ஓசூர் காவல்துறையினர் நேற்றிரவு கைது செய்தனர். 
 
பின்னர் அவர்களை ஓசூர் கொண்டு வந்து விசாரணை நடத்தினர். கூட்டாளியான பாபுவுடன் கடந்த ஆண்டு விஜயகுமாருக்கு ரியல் எஸ்டேட் தொழில் மற்றும் பணம் கொடுக்கல் வாங்கலில் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது விஜயகுமார், பாபுவை தீர்த்துக் கட்டிவிடுவேன் என மிரட்டல் விடுத்துள்ளார். ஆனால், அதற்கு முன் விஜயகுமாரை கொலை செய்ய பாபு திட்டமிட்டு கண்காணித்து வந்துள்ளார்.
 
கடந்த 24 ஆம் தேதி பெங்களூர் ஓட்டலில் புது பட ஆடியோ கேசட் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட விஜயகுமாரை, ஓட்டல் வாசலில் வைத்து தீர்த்துக்கட்ட பாபு கூட்டாளிகளுடன் சென்றுள்ளார். ஆனால் அங்கு முடியாததால் காரை பின் தொடர்ந்து விரட்டி வந்து ஓசூர் பகுதியில் வழிமறித்து மடக்கி விஜயகுமாரை தீர்த்துக் கட்டியதாக விசாரணையில் கைதானவர்கள் வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.