1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Updated : சனி, 21 நவம்பர் 2015 (08:10 IST)

133 அடியைத் தாண்டிய முல்லைப்பெரியாறு அணை: மூவர் கண்காணிப்பு குழு ஆய்வு

முல்லைப்பெரியாறு அணையில் மூவர் கண்காணிப்பு குழு 30 ஆம் தேதி நேரில் ஆய்வு செய்யவுள்ளனர்.


 

 
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடியில் இருந்து 142 அடியாக உயர்த்திக் கொள்ளலாம் என்று உச்ச நீதிமன்றம் தீப்பளித்தது.
 
மேலும், அணையின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பை பார்வையிட்டு ஆய்வு செய்வதற்காக மூவர் கண்காணிப்பு குழுவையும் அமைத்து உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு தீர்ப்பளித்தது.
 
இதைத் தொடர்ந்து, மத்திய நீர்வள ஆணையத்தின் தலைமை பொறியாளர் எல்.ஏ.வி.நாதன் தலைமையிலான குழுவில், தமிழ்நாடு பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் என்.எஸ்.பழனியப்பன், கேரள மாநில நீர்ப்பாசனத்துறை கூடுதல் தலைமை செயலாளர் வி.ஜே.குரியன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
 
இந்த மூவர் குழு கடந்த ஜூன் மாதம் 22 ஆம் தேதி அணையில் ஆய்வு மேற்கொண்டனர். அதன்பிறகு துணை கண்காணிப்பு குழுவினர் ஆய்வுகள் மேற்கொண்டு மூவர் கண்காணிப்பு குழுவிற்கு அறிக்கைகள் அளித்து வந்தனர்.
 
இந்நிலையில், அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக அணையின் நீர்மட்டம் நேற்று 133 அடியைத் தாண்டியது.
 
இது குறித்து, துணை கண்காணிப்பு குழுவினர் மூவர் கண்காணிப்பு குழுவிற்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து மூவர் கண்காணிப்பு குழுவினர் வருகிற 30 ஆம் தேதி முல்லைப்பெரியாறு அணையில் ஆய்வு நடத்த திட்டமிட்டுள்ளனர்.
 
அணையில் மேற்கொள்ளப்படும் ஆய்வைத் தொடர்ந்து, ஆய்வுக்கூட்டம் நடைபெறவுள்ளது. கூட்டத்தில் அணையின் நீர்மட்டத்தை உயர்த்துவதுவதற்கான விவகாரங்கள் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தக்கூடும் என்று கூறப்படுகிறது.
 
மேலும், வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளதால் அணையில் செய்யப்பட வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.