1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Updated : சனி, 12 ஜூலை 2014 (13:28 IST)

மவுலிவாக்கம் கட்டட விபத்து: சி.பி.ஐ. விசாரணை கோரி திமுக பேரணி

மவுலிவாக்கம் கட்டட விபத்து குறித்து சி.பி.ஐ. விசாரணை கோரி சென்னையில் திமுக சார்பாக மு.க.ஸ்டாலின் தலைமையில் மாபெரும் பேரணி நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான திமுக தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
போரூர் மவுலிவாக்கத்தில் கடந்த மாதம் 28 ஆம் தேதி 11 மாடிக் கட்டடம் இடிந்து தரை மட்டமானதில் 61 பேர் பலியானார்கள். 27 பேர் படுகாயங்களுடன் காப்பாற்றப்பட்டனர்.
 
11 மாடி கட்டடம் இடிந்து விபத்துக்குள்ளான சம்பவம் பற்றி விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ரகுபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. இதுதவிர போலீஸ் கமிஷனர் மேற்பார்வையிலும் புலன் விசாரணை நடைபெறுகிறது.
 
ஆனால் இதில் சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி வலியுறுத்தி வந்தார். இந்த கோரிக்கையை வலியுறுத்தி சென்னை, காஞ்சீபுரம் மாவட்ட தி.மு.க. சார்பில் இன்று பிரமாண்ட பேரணி நடத்தி கவர்னரிடம் மனு கொடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி இன்று எழும்பூரில் உள்ள சி.எம்.டி.ஏ. அலுவலகம் அருகே உள்ள லேங்ஸ்கார்டன் சாலையில் இருந்து காலை 10 மணிக்கு பேரணி புறப்பட்டது.

தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். அவருடன் முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு, முன்னாள் அமைச்சர்கள் துரைமுருகன், வேலு, பொன்முடி, பூங்கோதை, ரகுமான்கான், பெரிய கருப்பன், ஐ.பெரியசாமி மற்றும் செங்குட்டுவன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் வைத்திலிங்கம், புகழேந்தி, மாவட்டச் செயலாளர்கள் தா.மோ.அன்பரசன் (காஞ்சீபுரம்), ஜெ.அன்பழகன் (தென் சென்னை), ஆர்.டி.சேகர் (வடசென்னை) ஆர்.எஸ்.பாரதி (சட்டத்துறை செயலாளர்) ஆகியோர் உள்பட பல்லாயிரக்கணக்கான தி.மு.க.வினர் பேரணியில் பங்கேற்றனர்.
 
இந்த பேரணியில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பி.கே.சேகர்பாபு, ப.ரங்கநாதன், செங்கை சிவம், முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியன், மகளிரணி புரவலர் புலவர் இந்திரகுமாரி, வழக்கறிஞர் கிரிராஜன் உள்பட ஏராளமான தி.மு.க. நிர்வாகிகள் தொண்டர்கள், மகளிரணியின் பங்கேற்றனர்.
 
பேரணி ராஜரத்தினம் விளையாட்டு திடல் அருகில் சென்று முடிவடைந்தது. அங்கு மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றி சி.பி.ஐ. விசாரணை கோரி வலியுறுத்தி பேசினார். பின்னர் மு.க.ஸ்டாலின் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் தா.மோ.அன்பரசன், ஜெ.அன்பழகன், ஆர்.டி.சேகர், சட்டத்துறை செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கவர்னர் மாளிகைக்கு காரில் சென்று கவர்னர் ரோசய்யாவிடம் மனு கொடுத்தனர்.
 
தி.மு.க. பேரணியில் பங்கேற்க ஆலந்தூர், மீனம்பாக்கம், பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம், செங்கல்பட்டு, மறைமலைநகர், காஞ்சீபுரம் உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து ஏராளமான தி.மு.க.வினர் ரயில்களில் வந்ததால் எழும்பூர் ரயில் நிலையத்தில் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.