வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: திங்கள், 15 பிப்ரவரி 2016 (15:48 IST)

மாப்பிள்ளை அமையாததால் கல்லூரி விரிவுரையாளர்-தாய் தற்கொலை

மாப்பிள்ளை அமையாததால் கல்லூரி விரிவுரையாளர்-தாய் தற்கொலை

மாப்பிள்ளை பார்ப்பதில் ஏற்பட்ட தகராறில் கல்லூரி விரிவுரையாளர் மற்றும் அவருடைய தாய் இருவரும் தனித்தனியே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
 

 
பெரம்பலூர் மாவட்டம் அரணாரை நடுத்தெருவை சேர்ந்த எல்.ஐ.சி. முகவரான ராஜேந்திரன் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இவரது மனைவி பாக்கியம். இவர்களுக்கு தினேஷ் பாபு (30) என்ற மகனும், கிருத்திகா (25) என்ற மகளும் உள்ளனர். தினேஷ் பாபுவிற்கு திருமணமாகி சந்தியா என்ற மனைவி உள்ளார்.
 
தினேஷ்பாபு பெரம்பலூரில் உள்ள தனியார் டயர் தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார். கிருத்திகா பெரம்பலூரில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் விரிவுரையாளராக வேலை பார்த்து வந்தார்.
 
நேற்று முன்தினம் தினேஷ் பாபு வேலை தொடர்பாக சென்னைக்கு சென்று விட்டார். அவரது மனைவி சந்தியா திருச்சி மாவட்டம் துறையூரில் உள்ள தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.
 
இந்நிலையில் நீண்ட நேரம் வீட்டின் கதவு திறக்காததை அடுத்து, அக்கம்பக்கத்தினர் சென்று பார்த்துள்ளனர். அப்போது பாக்கியம் படுக்கை அறையிலும், கிருத்திகா குளியல் அறையிலும் தூக்குப் போட்ட நிலையில் பிணமாக தொங்கியுள்ளனர்.
 
இதனையடுத்து, பொதுமக்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. காவல் துறையினர் 2 பேரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
 
காவல் துறையினர் நடத்திய விசாரணையில், கிருத்திகாவுக்கு திருமணம் செய்து வைப்பது தொடர்பாக இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. மேலும், கிருத்திகாவுக்கு சரியான மாப்பிள்ளை அமையவில்லை என்றும் கூறப்படுகிறது.
 
இதில் மனமுடைந்த கிருத்திகா குளியல் அறைக்கு சென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். மகள் இறந்ததால் மனமுடைந்த பாக்கியமும் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.