எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் மீது பண மோசடி வழக்கு: காவல் துறை நடவடிக்கை


Caston| Last Modified சனி, 18 ஜூன் 2016 (16:19 IST)
எஸ்.ஆர்.எம். கல்வி நிறுவனம் மீது சென்னை காவல் துறையினர் பணம் மோசடி வழக்கு பதிவு செய்துள்ளனர். சமீப காலமாக மதன் தலைமறைவு, மருத்துவ சீட் வாங்கி தருவதாக பண மோசடி என எஸ்.ஆர்.எம் கல்வி நிறுவனத்தின் பெயர் செய்திகளில் வந்த வண்ணமே உள்ளது.

 
 
கடந்த மாதம் 29 தேதி தனக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிகளை எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக அதிபரும் ஐ.ஜே.கே கட்சி தலைவருமான பாரிவேந்தர் தான் தீர்த்து வைக்க வேண்டும் என கடிதம் எழுதி வைத்து விட்டு வேந்தர் மூவீஸ் மதன் மாயமானார்.
 
இதனையடுத்து மதன் குறித்து பல வாதந்திகள் வெளியாகின. பின்னர் மதனின் தாயார் மற்றும் அவரது மனைவிகள் ஆகியோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்நிலையில் மருத்துவப் படிப்புகளுக்கு சீட் வாங்கி தருவதாக கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக தலைமறைவான மதன் மீது பல புகார்கள் கமிஷ்னர் அலுவலகத்தில் குவிந்தன.
 
200 கோடி ரூபாய் அளவுக்கு மதன் மோசடி செய்திருக்கலாம் என குற்றம் சட்டப்பட்டது. இதனையடுத்து மதனுக்கும் தங்களுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என பாரிவேந்தர் அறிக்கை வெளியிட்டார்.
 
இதனையடுத்து மதன் மருத்துவ சீட் தொடர்பான அனைத்து பணத்தையும் பாரிவேந்தரிடம் ஒப்படைத்துவிட்டான் என அவரது தாயார் தங்கம் கூறினார். மேலும் மதன் குறித்து எந்த தகவலும் கிடைக்காததால் அவரது தாயார் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இதனையடுத்து இரண்டு வாரத்திற்குள் மதனை உயிருடன் கொண்டு வர வேண்டும் என காவல் துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
 
இதனையடுத்து பாரிவேந்தர் சார்பில் மதன் மீது புகார் அளிக்கப்பட்டது. எஸ்.ஆர்.எம். பெயரை பயன்படுத்தி மாணவர்களிடம் இருந்து கோடிக்கணக்கான பணம் மோசடி செய்ததாக அந்த புகாரில் கூறப்பட்டது.
 
இந்நிலையில் மதனின் உதவியாளர்கள் இரண்டு பேரும் மதனுடன் சேர்ந்து மாயமாகி உள்ளதும் தெரியவந்தது. இவர்கள் மூவர் மீதும் காவல் துறை வழக்கு பதிவு செய்தது. இதனையடுத்து எஸ்.ஆர்.எம். கல்வி நிறுவனத்தின் மீது சென்னை காவல் துறை வழக்கு பதிவு செய்துள்ளது.
 
இதில் மூன்றாவது குற்றவாளியாக எஸ்.ஆர்.எம். கல்வி நிறுவனம் சேர்க்கப்பட்டுள்ளது. இதில் முதல் குற்றவாளியாக தலைமறைவாகி உள்ள மதன் சேர்க்கப்பட்ட்டுள்ளார்.
 


இதில் மேலும் படிக்கவும் :