1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: செவ்வாய், 22 மார்ச் 2016 (16:48 IST)

கோடிக்கணக்கில் மோசடி - அதிமுக முன்னாள் அமைச்சர் உதவியாளர் மீது வழக்கு

கோடிக்கணக்கில் பெணம் பெற்றுக்கொண்டு மோசடி செய்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உதவியாளர் மீது வழக்கு தொடரப்பட்டு உள்ளது.
 

 
இது குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில், ஜெ.ஸ்ரீதரன் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், ”தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் உதவி மேலாளராக பணி புரிகிறேன். எனக்கு, அரசு போக்குவரத்து கழகத்தில் நடத்துநராக பணியாற்றி வரும் சரவணன் என்பவர் மூலம் தென்னரசு என்பவர் அறிமுகமானார்.
 
இவர், போக்குவரத்துத் துறை அப்போதைய அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும், அவரது நேர்முக உதவியாளர்களுக்கும் மிகவும் நெருக்கமானவர் என்று கூறிக்கொண்டார். இவர் பலருக்கு அரசு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநர், நடத்துநர் பணிகள் வாங்கிக் கொடுத்ததாக கூறினார்.
 
இதை நம்பி பலரிடம் ரூபாயை வாங்கி, அவரிடம் கொடுத்தேன். அப்போது, தென்னரசுடன் தங்கராஜ், ஆனந்தன், பிரகாஷ் ஆகியோர் உடன் இருந்தனர். இதன் பின்னர், அவர் வேலை வாங்கித் தரவில்லை.
 
கொடுத்த பணத்தில் ரூ.1.14 கோடியை திருப்பியும் தரவில்லை. அவரிடம் தொடர்ந்து பணம் கேட்டால், தற்போதுள்ள போக்குவரத்துத் துறை அமைச்சரிடம் ரூ.1 கோடி கொடுத்துள்ளதாக கூறி, எனக்கு பணத்தை தர மறுக்கிறார்.
 
இதுகுறித்து சென்னை காவல் ஆணையரிடம் புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்த தென்னரசு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.
 
இந்த மனு நீதிபதி ஆர்.மாலா முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, மனுவுக்கு பதிலளிக்கும்படி காவல் ஆணையருக்கு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டார்.