வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Annakannan
Last Updated : வெள்ளி, 1 ஆகஸ்ட் 2014 (20:04 IST)

டி.என்.எஸ்.சி. வங்கியில் கைப்பேசி வங்கியியல் சேவை

தமிழ்நாடு மாநிலத் தலைமைக் கூட்டுறவு வங்கியில் 1 கோடி ரூபாய் செலவில் கைப்பேசி வங்கியியல் சேவை, (Mobile Banking Facility), அறிமுகப்படுத்தப்படும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
 
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி 110இன் கீழ், 2014 ஆகஸ்டு 1ஆம் தேதி அவர் அறிவித்ததாவது-
 
1. தமிழ்நாட்டில் கூட்டுறவு கடன் அமைப்பில் தமிழ்நாடு மாநிலத் தலைமைக் கூட்டுறவு வங்கி (TNSC Bank - The Tamilnadu State Apex Co-operative Bank Ltd), 46 கிளைகளுடனும், 23 மத்தியக் கூட்டுறவு வங்கிகள், 783 கிளைகளுடனும் மற்றும் 120 நகரக் கூட்டுறவு வங்கிகள் 183 கிளைகளுடனும் பொது மக்களுக்கு பல்வேறு வங்கிச் சேவைகளை வழங்கி வருகின்றன. தமிழகத்தில் அனைத்து மத்திய கூட்டுறவு வங்கிகளும், இந்திய ரிசர்வ் வங்கியின் உரிமம் பெற்று மைய வங்கியியல் தீர்வு முறையிலான வங்கியியல் சேவையினை, அதாவது, CORE Banking Services-ஐ அளித்து வருகின்றன. 2011-12ஆம் ஆண்டில் மத்திய கூட்டுறவு வங்கிகளில் 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 25 புதிய கிளைகள் துவக்கப்பட்டன. 
 
இதற்குப் பொது மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாலும், கூட்டுறவு வங்கிகளில் சேவைக் கட்டணம் மற்ற வங்கிகளை ஒப்பிடும் போது குறைவாக உள்ள காரணத்தினாலும், வாடிக்கையாளர்களுக்குப் பல்வேறு சேவைகளை வழங்கி வருவதன் காரணத்தினாலும், புதிய கிளைகளைத் துவக்கிட வேண்டும் என்ற கோரிக்கை பொது மக்களிடமிருந்து பெறப்பட்டுள்ளது. பொதுமக்களின் கோரிக்கையினை ஏற்று, அனைத்துப் பகுதி மக்களுக்கும் கூட்டுறவு வங்கிகளின் சேவையை விரிவாக்கம் செய்திட ஏதுவாக, 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 19 மத்திய கூட்டுறவு வங்கிகளின் கிளைகள், 2 நகரக் கூட்டுறவு வங்கிகளின் கிளைகள் என மொத்தம் 21 புதிய கிளைகள் துவங்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். 
 
2. தமிழ்நாடு மாநிலத் தலைமைக் கூட்டுறவு வங்கி தற்போது முழுவதுமாகக் கணினிமயம் ஆக்கப்பட்டு, பல்வேறு சேவைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது. தமிழ்நாடு மாநில தலைமைக் கூட்டுறவு வங்கி, இணைய தள வங்கிச் சேவையை, அதாவது Net Banking Facility-ஐ 2.8.2012 முதல் தனது வாடிக்கையாளர்களுக்கும், கூட்டுறவு நிறுவனங்களுக்கும் வழங்கி வருகிறது. இதன் தொடர்ச்சியாக, இணைய தள வங்கிச் சேவையினைப் பெற்று வரும் வாடிக்கையாளர்களுக்கு இணைய தளம் மூலம் சென்னை மாநகராட்சி, ஆயுள் காப்பீட்டுக் கழகம் போன்ற 300க்கும் மேற்பட்ட நிறுவனங்களுக்குப் பணம் செலுத்தும் வசதியினை 23.1.2013 முதல் தமிழ்நாடு மாநிலத் தலைமைக் கூட்டுறவு வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது. 
 
மேலும் இணைய தள வங்கிச் சேவையினை பயன்படுத்தி, வாடிக்கையாளர்கள், தாங்களாகவே வைப்புக் கணக்கினை துவக்கும் வசதியினையும்,அதாவது Online Deposit Opening Facility-ஐயும் அளித்து வருகிறது. வணிக வங்கிகளுக்கு இணையாக, தமிழ்நாடு மாநிலத் தலைமைக் கூட்டுறவு வங்கியால் அளிக்கப்படும் இவ்வகையான சேவைகளால் வங்கி வாடிக்கையாளர்கள் பெருமளவில் பயனடைந்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து, வாடிக்கையாளர்கள் தங்கள் கைபேசி மூலமாக வங்கிப் பணிகளைச் சிரமமின்றி மேற்கொள்ள ஏதுவாக 1 கோடி ரூபாய் செலவில் கைப்பேசி வங்கியியல் சேவை, அதாவது Mobile Banking Facility, தமிழ்நாடு மாநிலத் தலைமைக் கூட்டுறவு வங்கியில் அறிமுகப்படுத்தப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். 
 
3. தமிழ்நாட்டில் 23 மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிகள் 783 கிளைகளுடன் குறுகிய காலக் கூட்டுறவு கடன் அமைப்பின் முக்கிய அங்கமாகச் செயல்பட்டு வருகின்றன. இந்த வங்கிகள் பொது மக்களிடமிருந்து வைப்பு நிதியினைத் திரட்டி, அதன் மூலமாக இணைப்புச் சங்கங்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் கடன் தேவைகளைப் பூர்த்தி செய்து வருகின்றன. வாடிக்கையாளர்களின் அடித்தளத்தை அதிகரிக்க, இந்த வங்கிகளுக்கு நவீன வசதிகள் கொண்ட சொந்தக் கட்டடங்கள் கட்டப்பட வேண்டியது அவசியமாகும். பாதுகாப்புப் பெட்டக வசதி, பாதுகாப்பு கதவுகளுடன் கூடிய பாதுகாப்பு அறை, நவீன வங்கிக் கூடங்கள், சிறந்த உட்கட்டமைப்பு வசதி, பொலிவுடன் கூடிய வெளிப்புறத் தோற்றம், குளிர்சாதன வசதி, இருக்கை வசதி ஆகியவற்றை உள்ளடக்கிய சொந்தக் கட்டடங்கள் ஏற்கெனவே 14 மத்தியக் கூட்டுறவு வங்கிகளின் 25 கிளைகளுக்கு 6 கோடியே 25 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டு, அவற்றிற்குப் பொதுமக்கள் மற்றும் வாடிக்கையாளர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு, சொந்த அடிமனைகள் கொண்டுள்ள மத்திய கூட்டுறவு வங்கிகளின் 18 கிளைகளுக்கு அனைத்து வசதிகளுடன் கூடிய சொந்தக் கட்டடங்கள் 12 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும். 
 
இவ்வாறு ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.