1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Updated : சனி, 29 ஏப்ரல் 2017 (09:17 IST)

எடப்பாடி அணியில் இருந்து கொண்டே ஓபிஎஸ் முதல்வராக ஆதரவு தரும் அமைச்சர்!

எடப்பாடி அணியில் இருந்து கொண்டே ஓபிஎஸ் முதல்வராக ஆதரவு தரும் அமைச்சர்!

தமிழக முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் பதவியேற்க வேண்டும் என அந்த அணியில் உள்ள எம்எல்ஏ செம்மலை நேற்று கூறினார். இதனை எடப்பாடி பழனிச்சாமி அணியில் உள்ள அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வரவேற்றுள்ளார்.


 
 
அதிமுகவின் இரு அணிகளும் இணைவதற்காக கடந்த சில தினங்களாக முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் அதற்கான அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தையை இன்னமும் தொடங்காமல் இரு அணியினரும் தங்கள் கோரிக்கைகளை முன்வைத்து இழுத்தடித்து வருகின்றனர்.
 
சசிகலா குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் கட்சியில் இருந்து முழுமையாக நீக்க வேண்டும், ஜெயலலிதா மரணம் தொடர்பான சிபிஐ விசாரணை போன்றவற்றை நிறைவேற்றினால் தான் பேச்சுவார்த்தைக்கு வருவோம் என ஓபிஎஸ் அணியினர் கூறினாலும், பேச்சுவார்த்தை தள்ளிப்போவதற்கான காரணம் வேறு என்று தான் அரசியல் வட்டாரத்தில் பேசுகிறார்கள்.
 
அதாவது ஆட்சியும், கட்சியும் யாருடைய கையில் இருக்க வேண்டும் என்பது தான் உண்மையான பிரச்சனை என்கிறார்கள். கட்சியின் பொதுச்செயலாளர், மற்றும் முதலமைச்சர் பதவி யாருக்கு என்பதில் தான் உடன்பாடு வரவில்லை என பேசப்படுகிறது. இரு அணிகளும் முதலமைச்சர் பதவிக்கு கோதாவில் இறங்கியுள்ளதாக தகவல்கள் வருகின்றன.
 
இந்நிலையில் ஓபிஎஸ் அணியை சேர்ந்த மேட்டூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் செம்மலை முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் முதல்வராக வேண்டும். எடப்பாடி அணியுடன் சேர தொண்டர்கள் விரும்பவில்லை எனவும் கூறினார்.
 
இதனையடுத்து ஸ்ரீவில்லிப்புத்தூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் முதல்வராக வேண்டும் என்ற செம்மலையின் கருத்தில் தவறில்லை. இரு அணிகளும் இணைவதே அனைவரின் விருப்பமாக உள்ளது. இரு அணிகள் இணைவது குறித்த முடிவை எடுக்க செம்மலைக்கு அதிகாரம் இல்லை என்றார்.