வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Modified: திங்கள், 8 ஜூன் 2015 (09:47 IST)

பால் உற்பத்தியாளர்களின் துயரை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: கருணாநிதி வலியுறுத்தல்

பால் உற்பத்தியாளர்களின் துயரை போக்க தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.
 
இது குறித்து கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
 
தினந்தோறும் பால் கொள்முதல் பிரச்சினை பற்றி ஏதாவது செய்தி ஏடுகளிலே வந்து கொண்டே உள்ளது. அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் 2011 ஆம் ஆண்டிலேயே, திமுக ஆட்சியில் பாலின் விலை லிட்டர் ஒன்றுக்கு 17 ரூபாய் 75 பைசா என்றிருந்த நிலையினை மாற்றி, 24 ரூபாயாக, அதாவது லிட்டர் ஒன்றுக்கு 6 ரூபாய் 25 பைசா அளவுக்கு உயர்த்தியதையும்; 2014 ஆம் ஆண்டு அக்டோபரில் 24 ரூபாய் என்பதிலே இருந்து மேலும் லிட்டருக்கு 10 ரூபாய் உயர்த்தி, 34 ரூபாய் என்று ஆக்கி பால் நுகர்வோரை பெரிதும் பாதித்திடும் வகையில், அதிமுக ஆட்சியினர் பால் விற்பனை விலையை இரண்டு மடங்காக உயர்த்தியதையும் யாரும் மறந்து விடவில்லை.
 
பால் வளத்துறையின் அமைச்சராக இருந்த ஒருவரின் கொள்ளை, அளவுக்கு மீறிப்போனதால், அதை மறைக்க வேறு வழியின்றி அதிமுக வின் தலைமை அந்த அமைச்சரை “டிஸ்மிஸ்” செய்து வீட்டுக்கு அனுப்பியது.
 
அதன் பின்னர் அதிமுக பிரமுகர் ஒருவர் அடித்த கொள்ளை வெளியே தெரிந்து, அனைவருடைய கண்டனத்திற்கும் ஆளானதால் அவரை கைது செய்து சிறையிலே அடைத்தார்கள்.
 
இருந்தாலும் அவர் எப்படியெல்லாம் பாலில் தண்ணீரை கலந்து பஞ்சமா பாதகம் செய்து கொள்ளை அடித்தார் என்ற விவரம் எல்லாம் வெளிச்சத்திற்கு வந்தது. இந்த கொள்ளைகள் குறித்து தொடர்ந்து எதிர்க்கட்சிகள் ஓங்கிக் குரல் கொடுத்தே வருகின்றன. 
 
உண்மையான பால் உற்பத்தியாளர்களிடமிருந்து பாலை வாங்க மறுக்கின்ற ஆவின் நிர்வாகம், சில தனியார் பால் விற்பனையாளர்களை தொடக்க பால் கூட்டுறவு சங்கங்களின் இணை உறுப்பினர்களாக பதிவு செய்துகொண்டு, அவர்களிடமிருந்து லிட்டர் ஒன்றுக்கு 25 ரூபாய் விலை கொடுத்து வாங்குகின்றது.
 
அதன் மூலம் ஆளுங்கட்சியை சேர்ந்தவர்களும், நிர்வாகத்திலே இருப்பவர்களும் கூட்டுக்கொள்ளை அடித்து வருகிறார்கள் என்று செய்திகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன.
 
எனவே அதிமுக அரசு, மாநில மக்களின் மற்ற பிரச்சினைகளை அலட்சியப்படுத்தி ஒதுக்கி வைப்பதை போல, பால் உற்பத்தியாளர்களின் வாழ்வாதார பிரச்சினையையும் கருதாமல் உடனடியாக தலையிட்டு பால் உற்பத்தியாளர்களின் துயர் துடைத்திட தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டுமென்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் கருணாநிதி கூறியுள்ளார்.