செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Modified: ஞாயிறு, 26 அக்டோபர் 2014 (10:39 IST)

பால் விலை உயர்வு: தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம்

பால் விலையை லிட்டருக்கு ரூ.10 உயர்த்துவதாக தமிழக அரசு அறிவித்திருப்பதற்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
 
இது குறித்து திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
 
அதமுக அரசு இன்றைய தினம் பால் விற்பனை விலையை லிட்டர் ஒன்றுக்கு 10 ரூபாய் அளவுக்கு உயர்த்தி அறிவித்துள்ளது. தமிழகத்தின் வரலாற்றிலேயே இதுவரை எந்தவொரு அரசும் ஒரே நேரத்தில் பாலின் விலையை லிட்டர் ஒன்றுக்கு 10 ரூபாய் அளவுக்கு உயர்த்தியதே கிடையாது.
 
1991-1996 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில், பசும்பால் கொள்முதல் விலையை லிட்டர் ஒன்றுக்கு 2 ரூபாய் 26 காசு என்ற அளவுக்கு உயர்த்திவிட்டு, நுகர்வோரிடம் அதை விட அதிகமாக லிட்டர் ஒன்றுக்கு 3 ரூபாய் என்று பால் விலையை உயர்த்தினார்கள்.
 
ஆனால் இப்போது பால் உற்பத்தியாளர்களை அழைத்துப் பேசாமல், போராட நினைத்த அவர்களை அச்சுறுத்தி அடக்கிவிட்டு, தன்னிச்சையாகவே கொள்முதல் விலையை லிட்டர் ஒன்றுக்கு 5 ரூபாய் மட்டுமே உயர்த்தி விட்டு; விற்பனை விலையை மட்டும் 2 மடங்காக அதாவது லிட்டர் ஒன்றுக்கு 10 ரூபாய் என்ற அளவுக்கு உயர்த்தியிருக்கிறார்கள்.
 
‘விலைவாசியை நான் ஆட்சிக்கு வந்தால் குறைப்பேன்‘ என்று கூறி ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா ஒரே நேரத்தில் பாலின் விலையை ஏற்கனவே லிட்டர் ஒன்றுக்கு 6.25 உயர்த்தினார்.
 
தற்போது தமிழக அரசு லிட்டர் ஒன்றுக்கு பாலின் விலையை ரூபாய் 24 என்பதில் இருந்து ரூபாய் 34 ஆக உயர்த்தி ஏழை, எளிய, நடுத்தர குடும்பங்களிடமும், அந்த குடும்பங்களில் உள்ள குழந்தைகளிடமும் காழ்ப்புணர்வை வெளிப்படுத்தியிருக்கிறது.
 
அண்மையில் ஆவின் பால் நிறுவனத்திலே நடைபெற்ற கோடிக்கணக்கான ஊழலை அப்படியே மறைத்து விட்டு, அந்த ஊழல் காரணமாக ஏற்பட்ட நட்டத்தை ஈடுகட்ட பாலின் விற்பனை விலையை ஒரே நேரத்தில் லிட்டர் ஒன்றுக்கு 10 ரூபாய் என உயர்த்தி, சாதாரண பொதுமக்கள் தலையில் அந்த சுமையை ஏற்றியிருப்பதை திமுக வின் சார்பில் வன்மையாக கண்டிப்பதோடு, இந்த விற்பனை விலை உயர்வினை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.
 
பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
 
அதிமுக ஆட்சிக்கு வந்த பின்னர் கடந்த 19-11-2011 அன்று அனைத்து வகை பால்களின் விலை லிட்டருக்கு ரூ.5.50 முதல் ரூ.9.50 வரை உயர்த்தப்பட்டன. அதன்பின் 3 ஆண்டுகள் கூட நிறைவடையாத நிலையில், பால் விலை லிட்டருக்கு மீண்டும் ரூ.10 உயர்த்தப்பட்டிருப்பது மனிதாபிமானமற்ற செயலாகும்.
 
அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு இதுவரை பால் விலை லிட்டருக்கு அதிகபட்சமாக ரூ.19.50 உயர்த்தப்பட்டிருக்கிறது. இதுவரை எந்த ஆட்சியிலும் 3½ ஆண்டுகளில் பால் விலை உயர்வுக்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.
 
ஒரு தடவையில் லிட்டருக்கு ரூ.10 உயர்த்தினால், தினமும் ஒரு லிட்டர் பாலை பயன்படுத்தும் குடும்பத்திற்கு மாதம் ரூ.300 கூடுதல் செலவாகும். பாலுக்காக மட்டும் ஒவ்வொரு குடும்பமும் மாதம் ரூ.1350 வரை செலவிட வேண்டியிருக்கும்.
 
எது எப்படி இருந்தாலும், மக்களின் சுமையை உணர்ந்து பால் விற்பனை விலை உயர்வை தமிழக அரசு முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு பா.ம.க நிறுவனர் கூறியுள்ளார்.
 
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
 
கொள்முதல் விலையினை எருமைப் பாலுக்கு ரூ.4 , பசும் பாலுக்கு ரூ.5 மட்டுமே உயர்த்தி விட்டு, பால் விலையினை ரூ.10 உயர்த்தி உள்ளது தவறான செயலாகும்.
 
கொள்முதல் விலை ஏற்றத்தினை தவிர வேறு எந்த வித செலவும் அரசுக்கு ஏற்படப்போவதில்லை. ஏனெனில் நிர்வாக செலவு என்பது முன்பும், இப்பொழுதும் ஒன்றாகத்தான் இருக்கிறது. மக்களை பாதிக்கின்ற, வேதனையுறச் செய்யும் பால் விலை உயர்வு ஏற்கத்தக்கதல்ல. ஆகவே பால் விலை உயர்வினை தமிழக அரசு உடனே திரும்பப்பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
 
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
 
பால், மின்சாரம், குடிநீர் போன்ற அத்தியாவசிய தேவைகளில் அரசாங்கம் லாப-நஷ்ட கணக்கு பார்ப்பது ஏற்றுக்கொள்ள முடியாது. கொள்முதல் விலையையும் விற்பனை விலையையும் ஒப்பிட்டு அரசாங்கத்திற்கு நஷ்டம் ஏற்படுகிறது.
 
எனவே, 10 ரூபாய் விலை உயர்த்துகிறோம் என்று அரசு கூறும் காரணத்தை ஏற்க முடியாது. பால் கொள்முதல் விலை உயர்வால் ஏற்படும் கூடுதல் செலவை அரசே ஏற்று மானியம் அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
 
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
 
தமிழ்நாடு அரசின் நேரடி நிர்வாகத்தில் உள்ள ஆவின் பால் விற்பனை நிறுவனம், விற்கப்படும் பாலுக்கு ஒரு லிட்டருக்கு பத்து ரூபாய் உயர்த்திருப்பது மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
 
கடந்த மாதம் ஆவின் பாலில் தண்ணீர் கலந்து கள்ளத்தனமாக விற்பனை செய்து கோடிக்கணக்கில் சம்பாதித்த ஊழல் விவரம் வெளிவந்தது. ஆவின் பால் நிறுவனத்தில் உள்ள பல குறைகளில் ஒன்று மட்டுமே பிடிபட்ட நிலையில் நிர்வாக சீர்திருத்தம் மூலம் நியாய விலையில் மக்களுக்கு பால் கிடைக்கச் செய்வதற்கு பதிலாக லிட்டருக்கு பத்து ரூபாய் வீதம் உயர்த்தி இருப்பது தவறான நடவடிக்கை ஆகும்.
 
தமிழ்நாடு அரசு ஒரு ரூபாய்க்கு ஒரு இட்லி, ஐந்து ரூபாய்க்கு சாம்பார்சாதம் என வழங்கி வருகிற அதே காலத்தில், அதே அரசு பால் விலையை லிட்டருக்கு பத்து ரூபாய் வீதம் உயர்த்தியிருப்பதை உடனே கைவிட இந்திய கம்யூனிஸ்டு கட்சி வற்புறுத்துகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
 
மேலும், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், இந்திய ஜனநாயக கட்சி நிறுவனத் தலைவர் பாரிவேந்தர், பாஜகவின் தமிழ் மாநிலதத் தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் உள்ளிட்டத் தலைவர்கள் பால் விலை உயர்வுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளனர்.