வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Modified: புதன், 9 செப்டம்பர் 2015 (07:58 IST)

பாதரச கழிவு விவகாரம்: மத்திய அமைச்சருக்கு அன்புமணி ராமதாஸ் கடிதம்

பாதரச கழிவுகளை அகற்றும்போது கடுமையான தரம் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் மத்திய சுற்றுச்சூழல்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு கடிதம் எழுதியுள்ளார். 
 
அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-
 
கொடைக்கானலில் சுற்றுச்சூழல் விதிமுறையை மீறியதாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தால் 2001 ஆம் ஆண்டு மூடப்பட்ட ‘இந்துஸ்தான் யூனி லீவர்’ நிறுவனத்தின் தெர்மா மீட்டர் தொழிற்சாலையின் பாதரச கழிவுகள் தொழிற்சாலை வளாகத்திலும், அதன் சுற்றுப்புறத்தில் உள்ள பகுதிகளிலும் பரவி மாசடைந்துள்ளது.
 
இந்த நச்சுதன்மையால் மனிதனின் மூளை மற்றும் சிறுநீரகத்துக்கு பாதிப்பு ஏற்படும். தண்ணீர் மற்றும் காற்று மூலமாக பாதரச கழிவுகள் பாம்பர் சோழ வனப் பகுதியில் உள்ள வைகை நீர்த்தேக்கம், கொடைக்கானல் ஏரிக்கு பரவும் அபாயம் உள்ளது.
 
ஆகவே பாதரச கழிவுகளை அகற்றும்போது பல்வேறு நடைமுறைகள் கடைப்பிடிக்கப்பட வேண்டும். ஒழுங்குபடுத்துபவர்கள் மற்றும் பொதுமக்கள் குழுவினர் மேற்பார்வையில் பாதரச கழிவுகளை அகற்றும்போது கடுமையான தரம் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும். 
 
தெர்மா மீட்டர் பாதரச கழிவுகள் அழிப்பு செய்வதற்காக அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படுமா என்பதை உறுதி செய்யவேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.