மதிமுக எம்.எல்.ஏக்கள் புஸ்ஸி ஆனந்துடன் சந்திப்பு: தவெக கூட்டணிக்கு மாறுகிறதா மதிமுக?
தமிழக வெற்றிக் கழகத்தின் முதலாவது சட்டமன்ற கூட்டத்தொடரில், ஆளுநர் உரையில் அறிவிக்கப்பட்ட "வெற்றி தமிழகம்" ஐந்து ஆண்டு தொலைநோக்கு திட்டங்களை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் வெகுவாக பாராட்டியுள்ளார். இந்த திட்டங்கள் தமிழ்நாட்டின் அடுத்தகட்ட வளர்ச்சிக்கு மிகவும் உகந்தது என வைகோ புகழாரம் சூட்டியுள்ளார்.
இதற்கிடையே, தவெக அரசின் முக்கிய அமைச்சரான புஸ்ஸி ஆனந்த் அவர்களை மதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் திடீரென நேரில் சந்தித்து பேசியுள்ளனர். ஏற்கனவே திமுக கூட்டணியில் தொகுதி பங்கீட்டின் போது தங்களுக்கு ஏற்பட்ட அதிருப்திகளை வைகோ மற்றும் துரை வைகோ ஆகியோர் வெளிப்படையாக பேசியிருந்த நிலையில், இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் மிக முக்கிய நகர்வாக பார்க்கப்படுகிறது.
திமுக கூட்டணியில் இருந்து விலகி, வளர்ந்து வரும் மாற்று சக்தியான தவெக-வின் கூட்டணிக்கு மதிமுக மாறப்போகிறதா என்ற விவாதங்கள் தற்போது எழுந்துள்ளன. எனினும், இந்த சந்திப்பு குறித்து பேசிய மதிமுக தரப்பு, "இது ஒரு மரியாதை நிமித்தமான சந்திப்பு மட்டுமே" என்று விளக்கம் அளித்துள்ளது.
இருந்தாலும், அடுத்தடுத்து வரும் அரசியல் நகர்வுகளால் தமிழகக் கூட்டணி சமன்பாடுகள் மாறக்கூடும் என அரசியல் விமரிசகர்கள் கணிக்கின்றனர்.
Edited by Siva
